ப்ளக், ப்ளக், ப்ளக்
இன்றைய
அதிகாலை
மிகச் சரியான நேரத்தில் பிறக்கவில்லை.
சாலை எங்கும் போக்குவரத்து நெரிசல். வாசல்
படியில் கூர்க்கா மேலும்கீழுமாகப்
பார்த்தான். மேலும் கீழுமாகச் செல்லும் இயந்திரத்தில்
தலைகீழாகப் பயணித்தேன், என் அறைக் கணினியில் நோய்க்கிருமிகள்
தாக்கம் அதிகம். தலைமை அதிகாரி கூப்பிட்டு நாகரிகமாகத்
திட்டினார்(ன்). நான் என்ன செய்ய?
இன்றைய அதிகாலைச் சூரியன் சரியான நேரத்தில் பிறக்கவில்லை.
மதிய உணவுப் பொட்டலம் கெட்டுவிட்டது. மாலைத் தேனீர்
மிகத் தித்திப்பாக இருந்தது. இன்று
மாலை பணிமுடிந்து
வியர்வையுடன் என் கிராமம் திரும்பினேன். ஆலமரத்தின் படிக்
கட்டில் சலனமற்ற குளத்தினுள் கற்களை ஒவ்வொன்றாக
வீசினேன். ஒரு கல், ஒரு ப்ளக், இரண்டாவது கல் ப்ளக்
ப்ளக், மூன்றாவது கல்லில் ப்ளக், ப்ளக், ப்ளக், ப்ளக். நான்காவது
ப்ளக் எப்படி? இன்றைய அதிகாலை மிகச்
சரியான நேரத்தில்
பிறக்கவில்லை. எல்லா ப்ளக் ப்ளக்குகளையும
குளத்தில் வீசிவிட்டுப் போய்விட்டேன். அடியாழத்தில் மூழ்கிய
குளத்துக் கற்கள் எல்லாம் எழும்பத் தொடங்கி,
தண்ணீரின்
மேற்பரப்பில் பூத்து அலைகின்றன.
வெள்ளை ரத்தம்
என் எலும்புகள் நொறுங்குகின்றன. பலத்த சப்தங்களுடன்
ஒரு கல் நொறுங்குகிறது, வண்டிச் சக்கரத்தின் கீழாக. என்
எலும்புகள் நொறுங்கும் ஓசை என் காதில் விழும்போது, முன்
நின்றுகொண்டிருக்கும் கனரக வண்டியின் பின்புறம் விழும்
கற்களைக் கற்கள் கட்டி அணைக்கின்றன, இன்னும்
விழாதவாறு. ஒரு கல், ஒரு கல், சில கற்கள் இன்னொன்றைக்
கட்டி அணைக்கும்பொழுது, என் எலும்புகள் மீண்டும்
நொறுங்குகின்றன. கல்லின் எலும்புகள்
தார்ச்சாலையில் சுக்கல் சுக்கலாக நொறுங்கிப்
பரவும்போது, நகரத்தின் மீது ஒரு வெள்ளை ரத்தம்
பரவிப் பரவிப் பரவுகிறது. அது
நகரத்தின்
கால்களை நனைக்கிறது. அப்போது எல்லோர்
எலும்புகளும் நொறுங்கிவிடுகின்றன.
நான், என் ரத்தம்
வெள்ளையாவதை கண்டு கொண்டேன்,
எல்லா வெள்ளை ரத்தத்துடன்
ஒரு உருவகம்
நேற்று, பஞ்சமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தில்
அக்னிநட்சத்திரதோஷம் தொடங்கிற்று. எவ்வளவு வெயில்.
அக்னிநட்சத்திரம் பற்றி
வெயிலில் மட்டும் சுற்றி அலையும்
பரதேசியின்
இரு வார்த்தை, ஒரு உருவகம்,
“கொதிக்கும் தேநீர்”
ராஜ க்ரீடம்
வானில் மேகங்கள் சிறிதும் அலையவில்லை, விண்
மீன்களும் இரவில் இல்லை. அமிர்யோகத்தில்
வெயிலைச் சுற்றித் திரிந்த பரதேசி, வேப்பமரத்தின்
கீழாய்க்கிடந்த கல்பலகையில் அமர்ந்தான், நிழலாகி.
நின்ற வேப்பமரம், அவன்
தலையில் சூட்டியது சில வேப்பம்பூக்களை,
அவன் தலையில் மின்னுகிறது
வேப்பம்பூவாலான
ராஜ க்ரீடம்.
திருவிளக்கீடு
என் வீட்டின் முற்றத்தில்
திருவிளக்கீடு வைத்து வந்துவிட்டேன்.
அகலின் சுடர்கள், வானின் சுடர்களைப்
பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தன. என்ன
செய்வது இந்த வேனல் மழையை?
மாலைவேளை வந்துற்றது என்பதால்,
ஒரு மழைத்துளி, ஒரு சுடரை
ஆரத் தழுவி
அணைக்கிறது, அணைகிறது.
திருவிளக்கு
திருபாற்கடலாகிக்கொண்டிருக்க.
நரபலி
புள்ளமங்கை துர்க்கையின் காலடியில்
ஒரு வீரன்
தன் கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கிறான்
பல நூற்றாண்டுகளாக.
அங்கே சென்று வந்தபின்
மனம் சீராக இல்லை
அவ்வப்போது
என்
கழுத்தைத்
தடவிப் பார்த்துக்கொள்கிறேன்
பெரும் வியர்வைத் துடைத்துக்கொள்கிறேன்.
நல்லவேளை
இன்னும்
என் கைகள் வாளாக மாறவில்லை
என் மோட்டார் சைக்கிள் பழுதாகிவிட்டது
என்
மோட்டார் சைக்கிளை அழைத்துச்சென்றேன்
பணிமனை,
ஆற்றுப்பாலத்திற்கு அருகில் மூங்கில்காற்றுடன்.
சின்னஞ்சிறுகொட்டகையில்
மோட்டார்சைக்கிள்
மருத்துவர் அமர்ந்திருந்தார் சுத்தியலுடன்
வெறுமனே
அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்
எங்கே
பழுதுபட்டிருக்குமென்று கேட்டுக்கொண்டிருந்தேன்
வெறுமனே
அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்
பிறகு
திருகாணியைக் கழட்டும் கருவியுடன்
அதை
நெருங்கி அதன் உறுப்புகளைக் கழட்டிக்கொண்டிருந்தார்
வெறுமனே
சின்ன சின்னச் சப்தத்துடன் அவை கழன்றபடி
பிறகு
அவற்றை மண் எண்ணெண்ணையில் நனைத்து
அதைக்
கழுவிக்கொண்டிருந்தார் ஊதியபடி
பிறகு
பழுதுபட்ட ஒரு திருகாணியைக் கண்டுபிடித்தார்
வெயிலிலும்
மழையிலும் வாழ்ந்தபடி
துருவேறிப்போன
அந்தத்
திருகாணியைப் பார்த்தபடித் தூக்கி எறிந்தார்
புதிய
திருகாணியை மாட்டிவிட்டு
மோட்டார்
சைக்கிளைத் தொடங்கினார், அது உறுமிற்று.
பிறகு,
அவர் எதுவும் வேண்டாம் என்றார் துக்கமாக
நான்
கொஞ்சம் இரங்கிவிட்டேன்
காசியும்
இல்லை, கங்கையும் இல்லை, காவிரியும் இல்லை
மூழ்கியபடி
இருக்கும் துருவேறிய திருகாணியை
தாங்கிச்
செல்லும் வெண்ணாற்றை
வெறுமனே
பார்த்துக்கொண்டு கடந்தேன்
ஆனால்
அது வெறுமனே போன்று இல்லை.
சித்திரைப் பட்சிக்காகக்
காத்திருத்தால்
கிளிகள்,
செங்காகங்கள், குதிரைகள், பட்டாம்பூச்சிகள்
மைனாக்கள்,
மாங்குயில்கள் எல்லாவற்றையும்
இந்த
முன்பனிக் காலத்தில் பார்த்தாயிற்று
சித்திரைக்காலத்தில்
என்
கொய்யா மரத்தின் மேல்
மஞ்சள்நிற
உடலில்
பழுப்புநிறக்
கழுத்தில்
சிவப்புநிற
வளையல் கண்ணில்
அமரவிருக்கும்
அந்தப்
பறவைக்கு
பெயர்
வைக்கக் காத்திருக்கிறேன்.
நீங்களும்
சொல்லுங்களேன்.
பாலிமலை
இந்தச்
சித்திரையிலும் நான் அங்கில்லை.
சித்திரைப்
பல்லாக்கில்
வரும்
சிவன் சிரிக்க, பார்வதி நாண.,
அதோ
பாலி
மலையில்
ஒளிர்கிறது
ஒற்றைச் சுடர்
நண்பா,
நீ
பார்க்கப்போகும்
அந்த
மஞ்சள்
வெயிலை
யாருக்குக்
கையளிக்கப்போகிறாய்?
நாகம்
இந்தப்
பிரதேசத்தில்
ஒரு
காலத்தில் பாம்புகள் அலைந்தனவாம்.
இப்பொழுதெல்லாம்
கட்டிடங்களுக்கிடையே
காங்கிரீட்
சாலைகள் அலைகின்றன
இரவில்
அதன்மேல் தனியாக நடப்பது பயம்
என்பது
வேறு கதை.
மகுடி
வாசிப்பவன்
அதிகாலையில்
வந்துவிட்டான்.
பாம்பு
இல்லை என்றாலும்
நாதமே
பாம்பாக மாறிவிட்டதுபோலும்.
அவர்
அவர் கதவை அவரவர் அடைக்க
நான்
கொஞ்சம் வெளியே வந்து
நாதத்தை
வாசலில் நிறுத்திக் காசிட்டேன்
மகுடிக்காரன்
கையை நீட்டினான் மீண்டும்
யாசிக்கும்
மகுடிக்காரனின் கை ஒரு படம் எடுக்கும் நாகம்
எனில்
தட்சணையிடும்
என் கரமும் ஒரு படம் எடுக்கும் நாகமே.
ஒன்றையொன்று
ஒன்று
முத்தமிடும் நாகம்.
எழுதுங்கள் நண்பர்களே
கோடைக்காலத்தின்
சாயை ஆரம்பித்துவிட்டது.
சில
மாம்பிஞ்சுகள், சில புளியம்பழங்கள், ஒருசில பனம்பழங்கள்,
ஈச்சம்பழங்கள், தைலான் குருவிகள், தீக்கொன்றைகள்,
தேன் அடைகள், சரக்கொன்றை நடனங்கள்
தேன்கொட்டைகள்,
நாகலிங்கப் பூக்களை
நீங்கள்
உதிர்க்கத் தொடங்குங்கள்.
(கல்குதிரை, இதழ் எண் 24, வேனிற்கால இதழ், ஏப்ரல் 2015)