Wednesday, 5 September 2012

ஆந்தரய் தார்க்கோவ்ஸ்கியின் ஏழு காவியங்கள் - ஜீ.முருகன்

தற்போது வாசித்துக் கொண்டிருப்பது ஏழு காவியங்கள் என்ற புத்தகம்.  தார்க்கோவ்ஸ்கியைப் பற்றி இதற்கு முன் வாசித்த புத்தகம் மக்களைத் தேடும் கலைஞன்.  அப் புத்தகம் வாசிக்கும்போது மிகுந்த பரவசம் அடைந்தேன்.  நகுலனையும் சுந்தர ராமசாமியையும் அப்போது வாசித்த பரவசத்தில் இருந்தேன்.  கலைஞன் என்பவன் கவிஞன், நாடகாசிரியன், சிற்பி என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனால் அவன் ஒரு கண்ணாடி. பிரபஞ்சத்தைப் பிரதிபலிக்கும் எழுத்துக்குரியன்.  படைப்பாளி என்பவன் யார்? அவன் படைப்பு இந்தப் பிரபஞ்சத்திற்கு என்ன செய்யவேண்டும்? என்றெல்லாம் தார்க்கோவ்ஸ்கி கூறுகிறார்.  அவருடைய படங்கள் குறித்துத் தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகம் என்பதைவிட இன்னொரு சிறப்பு ஒன்று இதில் இருக்கிறது.  அது, படைப்பின் விழுமியங்களை ஜீ. முருகன் தன் பார்வையாகவும் தார்க்கோவ்ஸ்கி பார்வையாகவும் முன் வைக்கிறார்.  இந்த ஆபாரமான புத்தகம் தார்க்கோவ்ஸ்கியைப் புரிந்துகொள்ள அல்லது படைப்பின் மனதைப் புரிந்துகொள்ள உதவும்.

தார்க்கோவ்ஸ்கியின் சிக்கலான படத்தை மிக எளிமையாகத் தந்திருக்கும் புத்தகம் தான் இது.  இதனை ஆதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

ஜப்பானிய தேவதைக் கதைகள்

சமீபத்தில் நான் வாசித்த கதைத் தொகுதி ஜப்பானிய தேவதைக் கதைகள். மொழிபெயர்த்தவர் என் நலம்விரும்பி ச. ஆறுமுகம். (பாபநாசப்பெருமாள் என்ற பெயரில் எழுதியவர்) தமிழில் வந்திருக்கிற முதல் ஜப்பானிய தேவதைக் கதைகள் தொகுதி இது.  கதைகளை நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறேன். ஆகஸ்ட் தீராநதி இதழில் சு.ரமேஷ் இத் தொகுதியின் சிறப்பைச் சொல்லி இருக்கிறார். வாசியுங்கள்.  இதை வெளியிட்ட  ஆழி பதிப்பகத்திற்கு நன்றி.

Friday, 10 August 2012

சப்தரேகை

கடந்த பத்து வருடங்காக நான் எழுதிய விமர்சனங்களைத் தொகுத்து, அனன்யா வௌயீடாக சப்தரேகை என்ற தலைப்பில் கொண்டுவந்துள்ளேன்.  

Wednesday, 27 June 2012

ராணிதிலக் நேர்காணல்


Thakkai
ஆகஸ்ட் 2008
ராணிதிலக் நேர்காணல்

ஆர். தாமோதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட ராணிதிலக், 1972-ல் வேலூரில் பிறந்தவர். 90-களின் இறுதியில் எழுத் தொடங்கிய இவரின் முதல் கவிதைத் தொகுப்பான நாகதிசை 2004 லிலும் இரண்டாவது தொகுப்பான காகத்தின் சொற்கள் என்ற உரைநடைக் கவிதை தொகுதி 2006லிலும் வெளிவந்தன. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் இவர், ஸங்க்ராந்த், தனுஷ் என்ற பெயர்களிலும் கவிதைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார். தமிழுக்கு மிக முக்கியமான பங்களிப்பைத் தரும் பாலி என்ற சிற்றிதழையும் நடத்திவருகிறார். இவரது உலகம் இயல்பான ஒரு வாசகனுக்கு புலப்படாத, மிக நுட்பமான புரிதலுக்கான முனைப்புகளை உள்ளடக்கிறது. ஆரம்பத்தில் மிகுந்த இருண்மையுடன் வெளிப்பட்ட இவரது கவிதை உலகம் மெல்ல தெளிவுற்று, அதே இருண்மையானது எளிமையினுள் உட்பொதிந்ததாக தற்போது மாறிவிட்டது.

உங்கள் வாழ்நிலம் உங்கள் வாழ்வுக்கும் எழுத்துக்கும் எவ்வளவு உபயோகமாக இருக்கிறது?

எந்த ஒரு கவிஞனுக்கும் அவனடைய வாழ்நிலம் முக்கியமான ஒன்று. என் நிலம் பாலைத்தன்மை கொண்டது. வேனலும் அதிகக் குளிரும் வீசக்கூடியது. அதனுடைய எரிச்சலும் நடுக்கமும் என்னைப் பாதிக்கிறது. ஒரு நிரந்தரமான மனோநிலையை அது எப்போதும் உருவாக்குவதில்லை. என் கவிதையில் வரும் பாலாறு, எப்போதும் வறண்டுகிடக்கும் ஒன்று, அத்திப்பூத்ததுபோல எப்போதாவது நீரோடும். அது ரம்மியமானது. ஒரு வேளை, வறட்சியில் கிடக்கும் வெறுமைதான், என் கவிதைகளில் கிடக்கும் மனோநிலையோ, என்னவோ? என்னுடைய கவிதையில் இருக்கும் இயற்கை இங்கிருந்தே கிடைத்தவொன்று. ஒவ்வொரு கணத்திற்கும் மாறியபடி இருக்கும் மலை ஒன்று, ஆற்றைப் பார்த்தபடி இருக்கிறது. எப்போதும் ஒரே சாயலில் இருப்பதில்லை, இந்த மலை. கணத்திற்குக் கணம் மாறும் மனதைக் கொண்டது, இது. அனுபூதியைத் தரக்கூடியது. தவிரவும், வேறொரு பிரதேசத்தில் நான் பயணிக்கும்போது, அங்கே வாழ்ந்தபடி இருக்கும் ஒரு வறண்ட ஆறு, வறண்ட மலை என்பது, என் ஆற்றின், மலையின் சாயை எனக் கண்டு ஏக்கமடைகிறேன்.

கவிஞனுக்கும் கவிதைக்குமான உறவின் நிலை என்ன?

கவிஞனுக்கும் கவிதைக்குமான உறவின் நிலை, ஆன்மீகம் ஆனது. மனதின் பிரசவம் அது. பெறப்பட்ட அனுபவத்திலிருந்து, எழுதப்பட்ட பிரதி வரை அமைவது. தாய்-சேய் நிலைதான். ஒரு கவிதையின் ஏதோவொரு எழுத்தில், வார்த்தையில், வரியில், அக்கவிதையின் கவிஞன் வாழ்ந்தபடி இருக்கிறான். யாருக்கும் புலப்படாமல். அவன் ஏக்கம், எழுத்தாகி உள்ளது. ஒரு கவிஞனின் வாழ்வு சாட்சியம் அல்லது கல்லறை அல்லது நினைவு ஸ்தூபி என்பது அவனின் கவிதைகளே.

எந்த மாதிரியான மொழியை உங்கள் கவிதைகளில் பயன்படுத்த நினைக்கிறீர்கள்?

மிக வெளிப்படையாகச் சொன்னால் எளிமையைத்தான். அதுவொன்றே கவிதையை அடைய செய்யும் வழி. ஒரு சிக்கலான அனுபவத்தில் வரும் எளிமையும், ஒரு எளிமையான அனுபவத்தில் வரும் இருண்மையும் கூட மொழியில் தன்னிச்சையாக நிகழ்ந்துவிடுவதுண்டு. மேலும் நான் எளிமையை நோக்கியே செல்கிறேன். என்னை மீறி, கவிதை தனக்கானதைத் தேர்ந்தெடுத்துவிடுகிறது. ஓர் அனுபவத்தைச் சாஸ்வதமாய்ச் சொல்லி விடுகிற மொழியைத்தான் நான் விரும்புகிறேன். ஏனெனில் எனக்குக் கிடைக்கும் அனுபவம் மிக வெளிப்படையானது... மிக மிகச் சிக்கலற்றது. ஒருவேளை, சிக்கலான அனுபவம், தனக்கான மொழியைப் பெற்றிடுமோ என்னவோ?

பிரசுரம் ஆவதற்கு முன் உங்கள் கவிதைகள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதுண்டா?

நிச்சயமாக. என் கவிதையில் இருக்கும் பிழை என் மனதுக்குத் தெரிவதில்லை. அது இன்னொருவர் பார்க்கும்போது சிக்கிவிடுகிறது. உதாரணத்திற்கு, என் ஆரம்ப கால எழுத்தில் இருந்த பல சிக்கல்களை ஸ்ரீநேசன் விடுவித்தார். தற்போது ஜீ. முருகன். சமீபத்தில் எழுதிய கவிதையின் கடைசி இரண்டு வரிகளை அவர் நீக்கும்போது, கவிதை தன்னிறைவு அடைந்ததைப் பார்த்து மகிழ்ச்சி உண்டானது. இதில் இன்னொரு ஆச்சரியம் திருத்துவதற்கு முன் எனக்கு நிறைவைத் தந்த ஒன்று, இரண்டு வரிகளை நீக்கிய பின்னும் நிறைவைத் தந்தது. இதனால், ஒரு கவிதையை இன்னொரு கவிஞன் விவாதிப்பதற்கும், அத்துறை சம்பந்தமற்ற மற்றொரு படைப்பாளி விவாதிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுவிடுகிறது. மற்றொரு படைப்பாளி ரகசிய அறைக்குள் பிரவேசித்து, பிழையை மீட்டுவிடுகிறார். ஒரு பூரணத்துவத்தை அடையச் செய்து விடுகிறார். மொழி மீதும், வடிவம் மீதும், இது கவிதை, இது கவிதை இல்லை என்ற தீர்ப்பை வழங்குபவர்கள் சக நண்பர்களாகிய படைப்பாளிகளைத் தவிர யார் இருக்கக்கூடும்?

கவிதையைத் திரும்ப திரும்ப எழுதுவீர்களா? அல்லது.....

ஆமாம். பலதடவை மனதில் பல வடிவங்களில் எழுதிப்பார்க்கிறேன். அடித்தலும் திருத்தலும் சேர்த்தலும் மனதிலேயே நிகழ்ந்துவிடுகிறது. கவிதையைத் தாளில் எழுதும்போது, ஒரு வார்த்தை அல்லது ஒரு வரி, மற்ற வார்த்தையுடன் அல்லது வரியுடன் தன்னைச் சேர்த்துக் கொள்கிறது அல்லது தனித்துக் கொள்கிறது. இங்கிருந்ததே வடிவம் தனக்கான ஸ்திதியை அடைந்து விடுகிறது என்று நம்புகிறேன். திரும்பத் திரும்ப எழுதும்போது, ஒரு கவிதையின் பல முகங்கள் எனக்குத் தெரியவருகிறது. அதில் எனக்கானதைத் தெரிவு செய்து கொள்கிறேன். அதன் வெற்றி அல்லது தோல்வி என்பது திரும்பத் திரும்ப எழுதுவதில்தான் அமைகிறது...... அது உங்களுக்கும் நிகழவும்கூடும்..... கவிதை உருமாறிக் கொண்டிருப்பது, அதற்கான பூரணத்துவத்தை நோக்கிச் செல்கிறதாகவே படுகிறது.

மற்றவர்கள் கவிதையை வாசிக்கும்போது என்னவாக உணர்கிறீர்கள்?

வாசிக்கும்போது நான் இருப்பதில்லை. பிரதியின் ஏதோ ஒரு பாத்திரமாகிவிடுகிறேன். காஃப்காவை, நகுலனை வாசிக்கும்போது நாம் அல்லாமல் வேறு யார் இருக்கக்கூடும். கவிதையைப் பொருத்தமட்டில், அந்த க்ஷணம் நம்மிருப்பில் இல்லை. கவிதையில் தான் இருக்கிறேன், ஏதோ ஒரு செடியாக, மலராக. கவிதையிலிருந்து விடுபட்டு பார்க்கும்போது நான் இல்லாமல் போகிறேன். ஓசிப் மெண்டல்ஷ்டாம், நகுலன் கவிதைகள் வாசிக்கும்போது இருக்கும் மனோநிலை பிரத்யேகமானது. என்னை அறியாமலேயே நானிந்த சூழலை உணர்ந்துவிடுகிறேன். சமீப காலமாக யவனிகா ஸ்ரீராம், சங்கர ராம சப்ரமணியன், ஸ்ரீநேசன் ஆகியோரின் கவிதைகளை வாசிக்கும்போது நான் எழுதி இருக்கவேண்டிய, எழுதாமல் விட்ட ஒன்றாகவே படுகிறது.

மற்றவரின் கவிதையை நீங்கள் ஏன் வாசிக்க வேண்டும்?

ஏனெனில் என்னால் எழுதமுடியாத ஒன்று அதில் இருக்கிறது. பாலைநிலவனின் கொண்டாட்டத்தையோ, யவனிகா ஸ்ரீராம் அரசியலையோ, பழனிவேளின் நிலத்தையோ, கண்டராதித்தனின் ஸ்திரிபோகத்தையோ என்னால் உணர்த்திருந்தாலும், எழுத முடியாததுதானே. கதவற்ற வீடு திறந்திருக்கிறது. நான் உள்ளே சென்றாக வேண்டும். வாழ்ந்தாக வேண்டும். இதையும் கடந்து கனகச்சிதமான வடிவத்தையோ, மொழியையோ நாம் கவிஞன் என்ற அடிப்படையில் கற்றாகவேண்டும்.... கொண்டாட வேண்டும். இவையும் ஒரு காரணமாகலாம். வாசிப்பதால்தான் எப்படியான கவிதையை நான் எழுதக்கூடாது என்பதை உணரமுடிகிறது. குட்டிரேவதி, பிரான்சிஸ்கிருபாவின் மொழியைக் காணும்போது, எப்படி மொழியை விணடிக்கக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்கிறேன். நகுலனை, பிரம்மராஜனை, தேவதச்சனை வாசிக்கும்போது கவிதையில் அமைந்திருக்கும் சூட்சுமங்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆக விதிவசத்தினால் ஒரு கவிதையை வாசித்தாக வேண்டியுள்ளது. விருப்பப்பட்டாலும் படாவிட்டாலும்கூட, ஏனெனில் அது பிரசுரமாகிவிட்டிருக்கிறது......

கவிஞனை வரையறுக்க முடியுமா? உங்கள் வகைப்பாடு கவிதையின் பண்முகத் தன்மையை நாசம் செய்யாதா?

கவிஞனை வரையறுக்க இயலும். ஏனெனில், அவன் சமூகத்திற்கு வெளியில் இருக்கிறான். சமூகத்தின், மதிப்புகளுக்கு, எதிரான, மாறான, இணையான மதிப்பைப் பெற்றவன். ஒரு கவிஞனின் உள்ளுணர்வு, நுண்ணுணர்வு சமூகத்திடம் எப்போதும் இருப்பதில்லை. புலப்படாத உலகத்தின் வாசனையை அறிந்தவன். கவிஞனின் பிறதுறை பற்றிய அறிவு, சமூகம் சாராதது. இப்படி சொல்வதால் அவனின் பன்முகம் மாறப்போவதில்லை. தத்துவம், அழகியல் ரசனை, ஆன்மீகம், இயற்கையான கவிஞனின் பன்முகம் இன்னும் ஆழமாக வளரவே செய்யும்.

மொழி எப்படி வீணடிக்கப்படுகிறது?

படிமங்களாலும், குறியீடுகளாலும்தான். நமக்குக் கிடைத்த அனுபவம் உருவகம் சார்ந்ததா அல்லது படிமத்தைச் சார்ந்ததா என்பதைப் பொறுத்தே கவிதையில் அவற்றின் பங்கு அமையக்கூடும். நமக்குக் கிடைக்கும் அனுபவவெளி ஒரு மனநிலையை மட்டும் கொண்டதாக இருக்கலாம். எழுதும்போது அந்த மனநிலைக்குச் சம்பந்தமற்ற, அழகியல் என்ற பூச்சிற்காக, பல படிமங்கள், உருவகங்களைப் பயன்படுத்தம்போது, கவிதையின் மனோநிலை சாகடிக்கப் படுகிறது. ஏனெனில் நாம், பெற்ற அனுபவம் ஒரு கணத்தில் நிகழக்கூடியது. அதனால், நாம் எழுதும்போது வரும் படிமங்களும் உருவகங்களும் அந்த கணத்தில் நிகழ்வதில்லை. நாம்தாம் உருவாக்குகிறோம். அடைகிறோம். இதனால் ஒரு கவிதை தன் ஆன்மாவை இழந்துவிடுகிறது. இவை குட்டிரேவதி, பாலைநிலவன், சகிர்தராணி, பிரான்சிஸ் கிருபா ஆகியோரின் பெரும்பான்மை கவிதைகளில் நிகழ்ந்துவிடுவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

கவிதைத் தொழில்நுட்பம் பற்றிய அறிவு கவிஞனுக்கு அத்யாவசியமானதா?

அத்யாவசியமானதுதான். ஒருவரை அடையாளம் காட்டுவது அதுதானே. ஆத்மாநாம் கவிதைகளை, அவரின் கவிதைபற்றிய உரையாடலை வாசிப்பவர், இதைத்தான் உணரமுடியும். அவரின் கவிதைகள் பலவும் வெற்றியடைந்திருப்பதற்குக் காரணம், அதனுடைய தொழில்நுட்பம்தான். சத்யன் கவிதைத் தொகுதிக்குப் பின்னால் அச்சிடப்பட்டிருக்கும் ஒரு கவிதையே, இதற்குச் சரியான உதாரணமென்பேன். மிசச் சமீப கால உதாரண கவிதைகளாக, பழனிவேள் மற்றும் ஸ்ரீநேசனுடையவை.

ஒரு சொல்லைப் பெயர்த்தெடுக்க முடியவில்லை என்றால், அது தொழில் நுட்பத்தால் விளைந்த ஒன்று. சிலருக்குக் கவனத்தில் நிகழ்ந்துவிடுகிறது.... சிலருக்கு யதேச்சையாய் அமைவதும் உண்டு. மொழி மற்றும் வடிவம் சார்ந்த ஒழுங்கமைவுக்கு இது அவசியம் தேவை. செழுமையை நோக்கிச் செல்லத் துடிக்கும் ஒரு கவிதைக்கு இது தேவையானதும்கூட எழுதுவதின் மூலம், வாசிப்பதின் மூலம் கண்டடைவதைவிட, திருத்தி திருத்தி எழுதும் நிலையில் கண்டடைவது திருப்திகரமானதாக இருக்கும் என நம்புகிறேன். திருத்தி எழுதுதல் என்பதுகூட தொழில் நுட்பம் சார்ந்த ஒன்றுதானே.......

கவிதை, வசன கவிதையிலிருந்து எங்கே பிரித்தறியப்படுகிறது? அதன் வீச்சை அடைந்துவிட்டதாக நம்புகிறீர்களா?

இன்றைய நவீன கவிதையிலிருந்து, உரைநடைக்கவிதை வடிவத்தில் பிரித்தறியப்படுவதாகவே நம்புகிறேன். இறுக்கமான வடிவம், தேர்ந்த மொழி ஆகிய டென்சனிலிருந்து விடுபட்டு, திறந்த நிலைக்கு உரைநடைக் கவிதை என்னால் எழுதப்பட்டது. எழுகை, மோனை போன்ற தொடை, சந்த நயங்கள் இன்றைய கவிதைகள் தெரிந்தோ, தெரியாமலோ எழுதப்படுகிறது. இத்தளையிலிருந்து விடுபட்டு, சுதந்திரமான வடிவ மொழிக்கு உரைநடைக்கவிதை வடிவம் உதவியது. இதன் வீச்சை என் பெரும்பான்மை கவிதைகள் அடைந்திருப்பதாகவே உணர்கிறேன், நம்புகிறேன்.

சம கால கவிதைகள் குறித்து ஏதாவது சொல்ல இருக்கிறா?

எப்படி சொல்லாமல் இருக்க முடியும்? இன்றைய கவிதையில் மிகச்சிறந்த ஆளுமைகளான இளம்கவிஞர்களைத்தான் குறிப்பிடுவேன். ஸ்ரீநேசனின் நவீன வாழ்வில் தத்துவமனோநிலை, கண்டராதித்தனின் மரபை மீறும் காமம், பழனிவேளின் உலகமயமாதலில் அழிந்துபோகும் நிலம், யவனிகா ஸ்ரீராமின் மூன்றாம் உலகம் மீதான அரசியல் நிலைப்பாடு, பாலைநிலவனின் இயற்கை மீதான வசீகரம், சங்கர ராம சுப்பிரமணியனின் தெளிவற்றதும் கொண்டாட்டமுமான குழந்தைமை மனோநிலை, லக்ஷ்மி மணிவண்ணனின் உடனடி அரசியல், கரிகாலனின் பின் நவீனத்துவ அரசியல், அய்யப்ப மாதவனின் புனைவுத்தன்மை, பெருந்தேவியின் தொன்மையைக் கடந்த வாழ்நிலை, மாலதி மைத்ரியின் பெண் அடையாளம் என அடுக்கிக் கொண்டேபோகலாம். மிக ஆரோக்கியமானதாகவும் மோசமானதாகவும் படுகிறது. உடலரசியல், சிறு தெய்வ வழிபாடு, கலகம், புனிதம் கலைத்தல், பாலியல் எனச் சமூக கட்டுகளை மீறி எழுதப்படுகிறது. கவிஞர் இசையின் கவிதையன்றில் வருவதுபோல், மதுவை ஊற்றியவுடன் பிளாஸ்டிக் டம்ளர் பொற்கலயமாகிவிட வேண்டும்.

கவிதையில் சொல்லை, தொடரைப் பிரிக்கும்போது என்னவிதமான மாற்றத்தைக் கவிதை அடைகிறது? உதாணத்துடன் விளக்க முடியுமா?

முடியும். என் கவிதை என்பதைவிட, இக்கேள்விக்கு உதாரணமாக ஸ்ரீநேசன் கவிதையை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவரின் நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் என்ற கவிதை ஞானக்கூத்தன், கரிகாலன், விக்ரமாதித்யன் எனப் பலரால் சிலாகிக்கப்பட்டவொன்று, மிகவும் தப்பார்த்தமாக. அக்கவிதையின் இடையில் வரும், நீங்கள் கூட பார்த்திருக்கலாம் என்ற வரி, மிகக் கவனக்குறைவால், நீங்களும் பார்த்திருக்கலாம் என்றே பட்டிருக்கிறது. கூட என்ற இணைப்புச் சொல்லை வெட்டித் தனியாக எழுதும்போது, நீங்களும் புணர பார்த்திருக்கலாம் என்ற அர்த்தத்தில் அமைந்துபோகிறது. இது ஏனோ நமக்குத் தெரிவதில்லை. ஆனால் மொழி மீது பரிச்சயம் கொண்ட நபரால், இப்பிரிப்பை அறிந்து, அர்த்தத்தை உணர முடியும் என் நம்புகிறேன். ஒரு சொல் பிரியும்போது, அது மனதில் வேறொரு சூழலை உருவாக்கிவிடுவதும் உண்டு. மிக எளிமையான உதாரணம், தேவதச்சனின் மத்/தியான வெயில் இங்கு மத் என்ற சொல் பிரிப்பு வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான மனோநிலையை உண்டாக்கிவிடக்கூடும். தொடரைப் பிரித்தலுக்கு, மிக எளிமையான, திறந்த நிலையிலான உதாரணங்களுக்குப் பிரம்மராஜனிடமும் நகுலனிடமும் நாம் போயாகவேண்டும்.

இலக்கிய அரசியல் ஒரு கவிஞனுக்குத் தேவையான ஒன்றா?

ஒரு கவிஞன் தன் புகழை மிகச் சீக்கிரமாக, எழுதாமலே அடைந்துவிட இலக்கிய அரசியல் தேவையானதுதான். இன்றைய சூழலில், யார் யார் அரசியல் பண்ணுகிறார்கள் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. எனக்கு அரசியல் எப்போதும் தற்கொலைக்குச் சமமானது.

மிகச்சிறந்த கவிதை எதைப்பற்றி அமையும் என உங்களால் யூகிக்க முடிகிறதா?

முடியும் என்று நினைக்கிறேன். இதுவும் ஒரு யூகம்தான். ஒரே வார்த்தையில் சொல்வதெனில், அதில் ஆன்மீகம் இருக்கும். இந்த ஆன்மிகம் மதத்தைச் சார்ந்தவொன்று அல்ல. ஒரு பேருண்மையை தனக்குள் அடக்கிக்கிடப்பது. அறுதியிட்டுக் கூற முடியாத தன்மையை அது எப்போதும் பெற்றிருப்பது. அழகியலையும் தத்துவத்தையும் சார்ந்து இயங்கக் கூடியது.

கவிஞனாக இருப்பதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?

கடைசி பட்சமாகவே உணர்கிறேன். நான் பெறும் மிக நுணுக்கமான அனுபவங்களை என்னால் எழுதமுடிகிறது என்பதால், சில கணங்களில் தோல்வியடைகிறேன் என்பதால், நாம் எழுதும் அனுபவங்களை, எழுதாதவர்களும் பெற முடியும் என்பதால்.

கவிதையை வாசிக்காத, எழுதாத கணங்களில் உங்கள் மனோநிலை எப்படியிருக்கிறது?

எப்போதும், வறண்டநிலைதான். நான் மட்டுமே இருப்பதான தோற்றம். என்னைப் புரிந்தவர்கள். முதலில் சொல்வது, நம்பமுடியாதவன். திடீர் திடீர் என மனநிலையை மாற்றிக் கொள்பவன். உடல் ஒரு நிலையில் இருந்தாலும், மனம் கணத்திற்குக் கணம் காற்றைப் போலவும், வெயிலைப் போலவும் உருமாறியபடியே இருக்கிறது. ஆனாலும் ஏகாந்தநிலையில், எச்சரிக்கையுடன் இன்னும் சொல்லப்போனால் விழிப்புடன் இருக்கிறேன். இதுவும் நண்பர்கள் சொன்னதுதான். நண்பர்கள் தான் என் மிகச் சிறந்த, தெளிவான, அப்பழுக்கற்ற கண்ணாடிகள். கண்ணாடிகளை மறுக்க முடியுமா என்ன?

தமிழ்க் கவிதையில் மிகச் சிறந்த ஆளுமையாக யாரை நினைக்கிறீர்கள்?

சிறு திருத்தம். ஆளுமைகள் என்று மாற்றிக் கொள்வோம். நகுலன், ஆத்மாநாம், பிரம்மாரஜன், தேவதச்சன் ஆகியோரை மிகச் சிறந்த ஆளுமைகளாக நினைக்கிறேன். புரிபடாத வாழ்நிலையையும் மனநெருக்கடிகளையும் கவிதையின் பல்வேறு சோதனை வடிவங்களையும் தரிசனம் மீதான கொண்டாட்டத்தையும் இவர்களைத் தவிர யாரால் தரமுடியும்? என் மனநிலைக்கு நெருக்கமாக இவர்களைத் தான் உணர முடிகிறது, என்னால்.

இன்றைய கவிஞர்களை, ‘இளம்தலைமுறைகள்’ என்று பெயரிட்டார் இந்திரன். ‘நான்காம் தலைமுறை’ என்று அழைக்கிறார் ஸ்ரீநேசன். உங்களின் கருத்து எப்படி.....?

நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவேண்டியததான். பெயரில் என்ன இருக்கிறது? இதை யார் சொன்னது என்பது உங்களுக்குத் தெரியும்தானே? நவீன வாழ்வின் கசப்புகளை, மரபை மீறிய வாழ்நிலைகளை, புனைவுகளை முன்வைக்கும் இவர்களை எப்படி என்றாலும் அழைக்கலாம். யார் பட்டியல் போட்டாலும், நாம் முதலில் செய்ய வேண்டியது, அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை முற்றிலுமாகக் கழற்றிவிடுவதுதான்.

இவர்களைக் கடந்து இன்றைய நவீன கவிதையில் சில பேரைச் சொல்லமுடியுமா?

நிச்சயமாகச் சொல்லமுடியும். குலசேகரன், இசை, இளங்கோ கிருஷ்ணன், இளஞ்சேரல், ஜீவன் பென்னி, பயணி, சீ. கோவிந்தராஜ், அ. செல்வராஜ் ஆகியோரை எனக்கு நெருக்கமாகக் கொள்கிறேன். நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஏன்?

ஏனெனில் அவர்கள் நம் அனுபத்தில் சிக்காததை எழுதுகிறார்கள்.

கவிதை விமர்சனத்துறை இப்போது எந்த அளவில் இருக்கிறது? 

மிகவும் பலவீனமாகத்தான் இருக்கிறது. சாதிய அரசியலையும் உடலரசியலையும் கடந்து இன்னும் கவிதை விமர்சனம் வெளியேறவேண்டும். குழு அரசியலும் மிக நேர்மையாக இருக்க வேண்டும். ஆனால், இளம் கவிஞர்களைக் இளம்கவிஞர்கள் எழுதுவது, விமர்சனநிலையில், ஆரோக்கியமாகவே உள்ளது.

உங்கள் கவிதை மீதான விமர்சனத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

ஏற்றுக் கொள்கிறேன், சில கணங்களில் மறுக்கவும் செய்கிறேன். எந்தவொரு படைப்பும், விமர்சனம் என்ற பெயரில் முழு முற்றாக அடைந்துவிடமுடியாது என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே. விமர்சனம் என்பது ஒரு படைப்பை, வேற களத்தில் புரிந்துகொள்ள, ஒரு வழிகாட்டுதல் என்றே நினைக்கிறேன். என்னுடையதை மட்டும் அல்ல, மற்றவர்களின் கவிதைகள் மீதான விமர்சனத்தையும் அப்படித்தான் எதிர்கொள்கிறேன்.

ஒரு கவிஞனின் அல்லது படைப்பாளியின் தன்னொழுக்கம் ஓர் அபத்தமா?

கவிஞனின் தன்னொக்கம் அபத்தமானதுதான். அவன் கொண்டிருக்கும் ஸ்திரி, லாகிரி வஸ்துகளின் தொடர்பு ஒன்றே அவனைக் கவிஞனாக மதிப்பிடப்படுவதில்லை. ஏனெனில் அவனைவிட சிறந்த ஸ்திரிலோலர்கள், குடிகாரர்கள், இச்சமூகத்தில் கவிதை எழுதாமலே வாழ்கிறார்கள். அறமின்மை அல்லது எதிர் - அறம் என்ற செயல்பாடு, கவிஞனை விட அதிகமாக அரசியல்வாதியிடம், கள்ளர்களிடம், விபச்சாரிகளிடம் இருப்பதால், அவனின் தன்னொழுக்கம் அபத்தமானதே, ஒழுக்கம் - ஒழுக்கமின்மை என்ற முரணில், கவிஞனைவிட, மிகச் சிறப்பாக வாழ்பவர்கள், இப்பூமியில் இருக்கத்தானே செய்கின்றார்கள், எனவே, அபத்தம் - அபத்தமின்மை என்ற வாழ்வு, கவிஞனுக்கு மட்டும் நிகழ்வது இல்லை.

கடைசியாக ஒரு கேள்வி, இலக்கியம் தவிர்த்து வேறு துறைகள் உங்களைப் பாதித்துண்டா?

ஆம். சமீப காலமாக தார்க்கோவ்ஸ்கியின் படங்களை, அவருடைய எழுத்தை வாசித்து வருகிறேன். தாஸ்தாவொயஸ்க்கியை எப்படி என்னால் உணரமுடிந்ததோ, அதற்கு இணையாக இவரை உணர்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால், என்னால் அகவயத்தில் பயணப்பட கற்றுத் தருபவர் அவர். நமக்குள் இருக்கும் ஸ்டாக்கரை அவர் சிருஷ்டித்துத் தருபவராகவே இருக்கிறார். ஒரு படைப்பாளி எப்படி இருக்க முடியும்? எப்படி பயணித்தாக வேண்டும் என்பதை உணர வைப்பவர், அவர். அன்பையும் இரக்கத்தையும் போதிக்கிறார் அவர். தாஸ்தாயெல்ஸ்க்கியையும் காஃப்காவையும் தார்க்கோவ்ஸ்கியையும் மௌனியையும் நகுலனையும் கோணங்கியையும் பின்தொடர்பவர்கள் தீவிர கதியைப் பெற்றிடுபவர்களாகவே இருக்க முடியும். சினிமாவைத் தவிர எனக்குக் கிரிக்கெட் பிடித்த வொன்று. நான் ஒரு லெக்ஸ் ஸ்பின்னர். சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டில் நான் ஒரு ஒழுங்கமைதியை, பிரத்யேகமான நடையைக் கண்டடைகிறேன். ஒரு பந்தை அவதானிப்பதில், அதற்குப் பதில் தருவதில் அவரை விட யார் பிரமாதம்? சொல்லுங்கள். மிக அதிக ரன்கள் எடுக்கும்போது, அவரின் முகத்தைப் பாருங்கள். இதைத்தான் அவர்களிடம் காண்கிறேன்

அரும் பெறல் மரபின் கரும்பு இவண்


அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ராணி திலக் 
விக்ரமாதித்தன் நம்பி
ராணி திலக்
நீ எழுதுகிறாய் ஒரு மேசையின் நீள அகலத்தைப் பற்றி
நீ எழுதுகிறாய் ஒரு மேசையின் நீள அகலத்தைப் பற்றி
ஒரு மண்குடுவை கீழே விழுந்து உடைவதை என்னால்
தடுக்க முடிவதில்லை.
அவள் எழுதுகிறாள் ஒரு நியாயாதிபதியின் ஒருவத்தைப் பற்றி ஒரு நிரபராதி தூக்கிலிடப்படுவதை என்னால் பார்க்கத்தான் முடிகிறது.
இவள் எழுதுகிறாள் ஒரு கடலின் உப்பைப் பற்றி
அதன் அலைகள் மக்களை விழுங்குவதிலிருந்து என்னால்
காப்பாற்ற முடிவதில்லை.
அவன் எழுதுகிறான் ஒரு நடிகையின் கன்னிமை பற்றி கற்பழித்தலிலிருந்து பல ஆண்டுகள் என்னால் மீட்கமுடிவதில்லை இவன் எழுதுகிறான் ஒரு வயதான நடிகனின் இளமையான ஒப்பனையைப் பற்றி
நடுத்தெருவில் நிற்கும் ரசிகைகளை என்னால் காப்பாற்ற முடிவதில்லை அவர்கள் எழுதுகிறார்கள் ஒரு அரசியல்வாதியின் பிறந்ததினம் பற்றி தொண்டர்கள் வேசிகளுடன் சல்லாபிப்பதை என்னால் தடுக்கமுடிவதில்லை.
உவன் எழுதுகிறான் ஒரு சாதனை வீரனைப் பற்றி
சூதாட்டத்தில் கொள்ளையடிக்கப்படும் பணத்தை நிறுத்த முடிவதில்லை.
உவள் எழுதுகிறாள் ஒரு சாமியாரைப் பற்றி பக்தர்களின் உடல்கள் நெருப்பில் எரிவதைப் பார்க்கத் தான் முடிகிறது.
நாம் எழுதுவோம் ஒரு தேசத்தைப் பற்றி
அடகு வைக்கப்படுவதை நம்மால் தடுக்கமுடிவதில்லை நான் எழுதுவேன் செயற்கையாக ஒரு கவிதையை எழுவது பற்றி
வாசிப்பவை அனைத்தும் நிகழ்வதை உன்னால் மறுக்க முடிவதில்லை.

- ராணி திலக்
(விதி என்பது இவைதான் தொகுப்பு பக்கம் 6)


எது கவிதை என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாத புதிர்த்தன்மையைத் தன் வசீகரமாகவும் சவாலாகவும் கொண்டு தன் இருப்பைப் புதுப்பித்துக் கொள்கிறது கவிதை. நிர்ணயிக்க முயலும் கோட்பாடுகளையும் வரையறுக்க முனையும் சூத்திரங் கடந்து ஒரு தப்படி முன்னே சென்று கொண்டேயிருக்கிறது. களையும் கவிதை செத்துவிட்டது. என்பது போன்ற மகா வாக்கியங்களையும் சட்டை செய்யாமல் நகர்கிறது.
ராணி திலக்கின் இந்தக் கவிதை எளிமையாகத் தோற்றமளிக்கிறது. எனில் எளிமையான கவிதை அல்ல. எப்படி உள்ளடக்கம் அப்படி. பல பரிமாணங்கள் கொண்டிருக்கிறது.

எழுத்தின் பயனின்மைப் பற்றிச் சொல்லும்போதுப் படுகிறதா. அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.
ஊதிப் பெருக்கிக் காட்டும் ஊடகங்கள் குறித்து தகவல் கலாசாலம் குறித்துக் கூறுகிறதா அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.

நிகழ்வனவெல்லாம் நிகழ்ந்துகொண்டுதாம் இருக்கின்றன. நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று மொழிவது போலத் தோன்றுகிறதா இருக்கலாம்.

எல்லோரும் எழுதுகிறார்கள் எல்லாவற்றையும் பற்றி.

ஆனால் எல்லாமும சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. எல்லோரும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவைபோல எடுத்துக் காட்டுகிறதோ. இல்லையென்று சொல்ல முடியாது.

எல்லாமும்தான். அப்பாலும்கூட.

பன்முகம் கொண்ட கவிதை. ஒற்றைப் பொருள் உரைத்துக் குறுக்கிட இயலாது.
சமூகம் சார் கவிதை. பார்க்கப்போனால் அரசியல் கவிதையும்தான்.
கடைசிப் பத்திக்கு முந்தைய பத்தியின் வரிகள் எதைக் காட்டுகின்றன.
நாம் எழுதுவோம் ஒரு தேசத்தைப் பற்றி
அடகு வைக்கப்படுவதை நம்மால் தடுக்க முடிவதில்லை
நான் எழுதுவேன் செயற்கையாக ஒரு கவிதையை எழுதுவது பற்றி இந்த வரி என்ன சுட்டுகிறது. கவிதை செய்யப்படுகிறது செயற்கையாக. அதைப்பற்றி எழுதுவேன் என்கிறார் கவிஞர் சரிதான். முதல் பத்தி.

நீ எழுதுகிறாய் ஒரு மேசையின் நீள அகலத்தைப் பற்றி
ஒரு மண்குடுவை கீழே விழுந்து உடைவதை என்னால்
தடுக்க முடிவதில்லை.

விஷயம் வெளிப்படையாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. விளக்கம் தேவையில்லை.
அவள் எழுதுகிறாள் ஒரு நியாயாதிபதியின் ஒருவத்தைப் பற்றி ஒரு நிரபராதி தூக்கிலிடப்படுவதை என்னால் பார்க்கத்தான் முடிகிறது.

இப்படி இருக்கிறது நிகழ்வு என்ன செய்ய.
இவள் எழுதுகிறாள் ஒரு கடலின் உப்பைப் பற்றி
அதன் அலைகள் மக்களை விழுங்குவதிலிருந்து என்னால்
காப்பாற்ற முடிவதில்லை.
இந்த வரிகள் சொல்வதென்ன நேரடியாகத்தானே கூறுகிறார் கவிஞர்.

அவன் எழுதுகிறான் ஒரு நடிகையின் கன்னிமை பற்றி கற்பழித்தலிலிருந்து பல ஆண்டுகள் என்னால் மீட்கமுடிவதில்லை. ஒரு விஷயத்தின் இன்னொரு பக்கம்? முரண்?
யூகிக்க வேண்டும். யோசிக்க வேண்டும்.
இவன் எழுதுகிறான் ஒரு வயதான நடிகனின் இளமையான ஒப்பனையைப் பற்றி.
நடுத்தெருவில் நிற்கும் ரசிகைகளை என்னால் காப்பாற்ற முடிவதில்லை.
வாசக அறிவை நம்பி எழுதப்படும்
வரிகள் இவைபோலும்தான் அமையும்.
அவர்கள் எழுதுகிறார்கள் ஒரு அரசியல்வாதியின் பிறந்ததினம் பற்றி தொண்டர்கள் வேசிகளுடன் சல்லாபிப்பதை என்னால் தடுக்கமுடிவதில்லை.
உவன் எழுதுகிறான் ஒரு சாதனை வீரனைப் பற்றி
சூதாட்டத்தில் கொள்ளையடிக்கப்படும் பணத்தை நிறுத்த முடிவதில்லை.
சாதனைக்குப் பின்னால் நிகழ்த்தப்பெறும் சூதாட்டம் கவனம் கொள்ள வேண்டியது இல்லையா.
உவள் எழுதுகிறாள் ஒரு சாமியாரைப் பற்றி பக்தர்களின் உடல்கள் நெருப்பில் எரிவதைப் பார்க்கத் தான் முடிகிறது.

கவிதையின் கடைசி வரி.

வாசிப்பவை அனைத்தும் நிகழ்வதை உன்னால் மறுக்க முடிவதில்லை.
உண்மைதான். சரிதான்.

இன்றும் ஆழ்ந்து கூர்ந்து கவனிக்கலாம். ஒரு நிகழ்வு, அதோடு முடிந்து விடுவதில்லை. அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக எதிர்வினையாக பாதிப்பாக மறுபக்கமாக இன்னொரு நிகழ்வும் இருக்கிறது. எனில், அது கவனிக்கப் பெறுவதில்லை அல்லது மறைக்கப்பட்டு விடுகிறது. ஒற்றைத் தொட்டு ஒன்று. ஆனால் ஒன்றைத்தான் மையப்படுத்துகிறோம் நாம். அப்படியானால் உண்மை.

மிக நுணுக்கமான விஷயத்தை முன்வைக்கிறார். ராணி திலக். இதனாலேயே மிக முக்கியமான கவிதை. ஓடு நீரின் உள்ளோட்டம் காட்டும் கவிதை. இதனாலேயே மேலான கவிதை.

சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லிவிடுகிறார் கவிஞர். சொல்முறையில் நூதனம் காட்டுகிறார். அதுதான் மருட்சி. ஒரு கவிதையை விஷயத்தை கவிஞன் தன் மனோதர்மத்துக்கிசையவே கட்டுகிறான். ராணி திலக்கின் கவிமனம் இப்படியாக.

ராணிதிலக்கின் சமூக ஓர்மையே இப்படி ஒரு கவிதையைத் தோற்றுவித்திருக்கிறது. ராணி திலக்கின் கவிமனவே இப்படி ஓர் உத்தியைக் கைக் கொண்டிருக்கிறது. அதைச் சொல்லி இதைச் சொல்லி, எதைச் சொல்ல வேண்டாமோ அதையே சொல்வதாக அப்படிச் சொல்லி, இப்படிச் சொல்லி ஆகக்கடைசியில் உரிய ஒன்றாகச் சொல்லியே தீர்வதாக. கட்டுரையில் முன் இருப்பவவற்றையெல்லாம் மறந்துவிட்டுக் கடைசியாக கூறியிருப்பனவற்றையே கருத்துக் கொள்ள வேண்டும். கவிதை அமைந்திருப்பது போலக் கட்டுரையும் அமைந்துவிட்டது. தம்போக்கில்.

ராணி திலக்கின் ஆகச் சிறந்த கவிதை இது. ஆகச் சிறந்த கவிஞராக அவர் வர முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதும் ஆகும். எதுவும் அவரவர் உள்ளுன் இருப்பதுவே. கவிஞனின் விழிப்புணர்வே அவனைக் காப்பாற்றும். பிறவெல்லாம் பேச்சுக்கும் (உதவாது) 

நன்றி முதற்சங்கு இதழ் ஜூன் 2012  மற்றும் தமிழ் ஸ்டுடியோ

Tuesday, 12 June 2012

ராணிதிலக் கவிதைகள் in English

பல வருடங்களுக்கு முன்பாக எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் MUSE INDIA இணைய இதழுக்கு மொழிபெயர்த்த கவிதைகள்  இவை.Rani TilakCredit: UNESCO Courier


Poems translated from Tamil by Ramakrishnan S


The Words of Fish
I commence my vision. There onwards river starts flowing. Same way the river concludes. As this river lives on, I sit on its bank. For, it is but here I get the reason (or opportunity) to lose my own being. When I hear its whirl and swirl, my legs reach the pebbles. At the moment when my fingers touch those stones that are softer, my eyes start seeing the fish. The lip-movements of the fish, the eyes don’t fail to see. But, my ears claim that the fish are conversing among themselves. I started believing that their words are meaningful. My heart began to construct meanings for the words of the fish. When I was about to start a dialogue with the fish, the misfortune befell. Just the way you think, darkness set in. Sound ceased to be. And, following suit, pebbles rolled away. The river also disappeared. As I cannot turn into ‘nought,’ I have arrived at this town. And, I try to communicate to those who come along the way, the words of fish. But, they enquire, “Why do your lips quiver like those of the fish?” Where I abhor the belief that I have in me, thereon the bubbles start breaking all the more. Even if they call the one who keeps wandering all over the city, uttering aloud to himself, a madcap, I don’t mind. From there alone start the incomprehensible words of the fish.

Mood Morbid
The glow of initial dawn fills me with misery. The cries of crows fill the place with sorrow. Some faces come across along the road. The sight proves terribly repulsive. Plants stand there, dry and shrunken. The flowers are bereft of their usual fragrance. The dogs are not barking but weep profusely. Their moan reminds me of the corpses. The shades of the coconut-tree break and crack the road. Somehow, I have gone past this monstrous noon, so maimed. The sunset that I love most fails to please me. I’ll compare this day to a crumpled piece of paper and crushed into a ball and thrown at one corner of the room. The next day I slowly spread it and see. A desert boils, like my shrunken heart. Its breath leaves through my nostrils.   

Bodhi: The Tree of Enlightenment
Voyaging a great distance I have come. Quietly, a tree appeared in front. Its leaves fluttered. An old man was approaching it. He was stark-naked. His body looked haggard; his skin, all dry; his eyes, so sunken. He sat under the tree, motionless. He was turning into a sculpture. I went near him. “Is it Bodhi?’ I asked. “No,” said a voice from nowhere. “Aren’t you the Buddha?’ I enquired. “No,” replied a voice. “Is this a dream?” asked I. He smiled. “See intently,” said a voice. I closed my eyes. Looked deep within. Opened my eyelids. Just a tree stood there. And, the old man alone.

God
The adjacent tenement is locked. The grand-daughter knocks at the door. Her grand-mother is sitting in front of God in the wide-opened room, pleading. The child knocks at the door repeatedly, her hand increasing the pressure. That disturbs the grandma. “No one is there, don’t knock at the door,” she tells. The child keeps on knocking at the door. Grandma, knocks at God’s door louder and louder, with words. The child knocks at God’s door, with hand. Grandma’s words, despite herself, turn harsh. When the sound of the child’s knocking at the door begins to destroy her harshness, she turns quiet. The child’s hand comes to rest. The God behind the word and the God behind the door remain quiet. Unknown to them, two doors begin to swing.

Metamorphosis
The child knows not the name of this illustration. It holds the sheet of paper and looks on. The sky is empty. A bird is flying there. As this is paper this is not sky and so also as this is an illustration this is not a bird – so you can refute. The child which keeps watching the bird flying, with a smile turns the page upside down, at a moment when we least expect it. Indeed, you know very well the difference between paper and sky. So is the difference between a ‘live’ bird and a ‘live’ picture. Yet, in an empty sheet of paper the bird keeps flying upside down. Or, in the vacant sky the illustration of a bird keeps flying upside down. Paper or Sky or Bird or Picture – all keep seeing the child’s ‘topsy-turvy’ face. Also, they know not what the child’s name is.

Peacock’s Call
The street looks deserted; may be because it is night. Also, it could be because the time is nearing midnight. Yet, even in the chill, snowy night roads branch out from one another and are forever growing. The ‘gurkha’ keeps a strict vigil, thus preventing anyone stealing the city. He blows his whistle, cautioning the thief. For a moment the roads and houses blink, opening and closing their eyes. The ill-fated sound of the whistle is indeed fear-instilling. When a ‘gurkha’ taps on the floor with his stick as if beating our very hearts we might even be tempted to kill him. I cross the roads, go past the houses. From a house a child screams. Its cry goes streaming down, all over the road and floods the city. As the cry intensifies, something happens inside me. I listen to the child’s cry, holding it in my heart. The roads and the houses remain fast asleep. For a moment, the peacock called, and flew off. 
Downpour
I hate the winter season which gifts me ailments. Snow that hides the Sun stands on the meadow. That reminds of someone’s spit. Could be someone’s tears. Whether I like it or not, it gains entry into my body. White hue melts in my blood and flows. The words that I utter are frozen as the very snow. In their meanings phlegm stands, densely stuck. You may also hate those words with so unbearable a stench. You who love the soft beauty of snow develop a dislike for the phlegm that collects in my body. Please don’t feel upset about the saliva that I spit in front of you. Let it insult the winter. It can be my gift to Mother Earth. One day, in winter it rains. Hating the prospect of getting wet you would be running. Then, from above phlegm would keep pouring down - so it would seem to me. When I hail and worship it, the clouds would move away and the Sun would surface. I would hail and worship that too. When you begin to dislike the Sun, you would earn some ailment. From my person, heat would begin to blow. You would start disliking me. I would give away my ailment as a gift to Summer which you loathe.

The City
I don’t like this city at all. Its people, like its streets, lanes and by-lanes, are too narrow. In the broad roads of these city-bred, dust is deeply engraved just like their own selves. Though I believe in none, this city with its vast stretch of despair and distrust has orphaned me. Of course, I believe in myself. I believe in my shadow too. Then, escaping the ‘web of day’ that it casts, I’ll wander like a gypsy. Not getting entrapped in any joint of the ‘web of night,’ I would’ve fallen asleep in some corner of the road. So thoroughly foul and venomous the city is. Nothing but nightmares it has gifted me. In my dream the city turns into a snake-hill. At dawn, when I woke up, I did see the charmer’s flute – ‘magudi’ in motion upon the city. It gives out music. Then, in one sweep, all doors of the city are thrown open. Snakes begin to move out and start creeping along the streets.

I Feel Hungry
I feel hungry. This is something common to all.  There lives on that tree a fruit which could relieve me of my hunger. An arrow would do to bring it down. Or, my body would do. I believed in my body. That began to climb on the tree. But, this small tree keeps on growing taller and taller. And, I grow older and older. I should be relieved of my hunger. I need that fruit. Though my legs could hold fast to the tree the hands are not able to pluck the fruit. In the ‘nest of arrows’ on my back, some arrows keep staring at the space. As I am growing old, I alight from the tree. Fixed the arrow firmly in the bow; aimed. My eyes hit at the fruit. Following my ‘sight’ flew the arrows. The fruit fell on the ground. A lone arrow alone brings it down. I plucked off that arrow from the fruit. Squeezed it into the ‘nest of arrows.’ Eating the fruit I got relieved of my hunger. The arrows which didn’t win over the fruit, were flying. They have now gone beyond the branch, leaf and the ‘power of gravitation.’ May be they are also feeling hungry.

Saturn
Atop my head, right in the middle, no spider dwells. Of late, the crow approaching my head habitually pecks it all too suddenly and flies away. They call these crows our dead ancestors. Wonder what have I done, to which of the dead ones? Also, as it is deemed a sin to stone the dead ones, the crow keeps escaping unhurt. Moreover, crow’s pecking implies one’s being possessed by Saturn – they claim. Saturn taking possession of me or not, I should at least inform the crow that I don’t possess a spider. In case that proves impossible, I should at least sever my head and give it off to the crow. But, as I possess just one head, even this is not possible. Further, doubts regarding the crow’s peck keep spreading numerous webs within. The crow doesn’t get entrapped in any of these. In case I get a spider, indeed I should hand it over to the crow. For the time being I keep on chasing away the crow. And, it persists in its pecking. After sunset stepping in, the crow disappears. Yet, seeing this night shining in the colour of crow, I feel a little apprehensive. And, I can’t help feeling my head every now and then.

Tuesday, 15 May 2012

இடாலியன் பேக்கரியில் வாழும் பூனை

அது இருட்டான ஒரு பேக்கரி.
அமர்ந்து குடித்துவிட்டுச் சட்டென்று செல்கிற அமைப்பு.
நாற்காலிகள் பாழ் அடைந்தவை
தரைகள் விரிசலிட்டுப் பாதாளம் பாய்பவை.
ஒரு பூனை அங்கு சுற்றித்திரிகிறது எதற்கென்று தெரியாமல்
அதை விரும்புபவர்களை அது விரும்புவதில்லை
அதை நேசிக்காதவர்களை அது செல்லமாக அழைக்கிறது
அவர்களின் கால்களை நக்கி, வாலால் துடைத்துவிடுகிறது
விருப்பமற்றவர்கள் எட்டி உதைக்கும்போது
அது அவர்களை ரௌத்ரமாக முறைக்கிறது
நாற்காலியின் கீழாக, மௌமாக உறைந்தபடி
வாழும்
அதன் மனோநிலை சமீபகாலமாக சரியில்லை
யாரிடமும் பேசாமல், யாரையும் கொஞ்சாமல்
எதிலும் பட்டும் படாமல்
திரிந்து வாழும் 
அந்தப் பூனை
இப்போது அங்கில்லை. அது
வழக்கம்போல் அமரும்
அந்த நாற்காலியில் வெறுமை படர்ந்திருந்தது.
எங்கிருந்தோ எழுகிறது பூனையின் சப்தம்
அதற்கென்று ஒரு பெயரில்லை.
நான் வைத்து அழைத்தேன் அதை:

நகுலன்


பிரசுரம்:  கொம்பு, இதழ் 1, செப்டம்பர் 2011.

ஒரு கவிஞனுக்கான மூடநம்பிக்கை

ஒரு கவிஞன் எனில்
கட்டாயம் மூடநம்பிக்கையில் வாழ்பவனாக வேண்டும்
எழுதும்போது அல்லது வாசிக்கும்போது அல்லது சிந்திக்கும்போது

ஒருவன் எழுதிக் கொண்டிருந்தபோது
சரியான வார்த்தையோ, வடிவமோ சிக்கவில்லை
என்றானபோது
அவன் தேநீர்க் கடைக்கு முன்பாகக் காத்திருந்தான்.
மிகக் குழப்பமான வார்த்தைகளால், வடிவத்தால், விஷயத்தால்
சிக்குண்டவன் இப்போது தனக்குள் சிக்கியபடி காத்திருந்தான்.

வழக்கம்போல்
அங்கே நுழைந்த பைத்தியம் பிடித்த பிச்சைக்காரன்
முதலாளியிடம் மன்றாடிப் பெற்ற ஒரு கண்ணாடித் தம்ளரில்
தேநீரக் குடித்து வைத்துவிட்டுப் போகிறான்
எச்சில் பட்ட கிளாஸை முதலாளி கழுவ எத்தனிக்கிறான்.
அங்கே நுழைந்த கவிஞன்
அந்த எச்சில் கிளாஸைத் தொட்டுவிட்டு, அதைக்கழுவி,
அதில் தேனீர்த் தரும்படி வேண்டுகிறான்.
பைத்தியம் பிடித்த, பிச்சைத்தனமான கிளாஸில்
தே
நீர்
அருந்திவிட்டு
எழுதத் தொடங்கினான்
சிக்கல் தீர்ந்த
நம் போன்ற ஒரு கவிஞன்.பிரசுரம்:  கொம்பு, இதழ் 1, செப்டம்பர் 2011.

திருவையாறு (செவ்வியல் பிரதியும் நவீன பிரதியும்)

திருஞானசம்பந்தன் சொன்னான்:

அங்கே பெண்கள் நடனமாடும் சலங்கையோசை எங்கும் எதிரொலிக்கிறது
முழவின் சத்தம் எங்கும் ஒலிந்து அலைய, அச்சப்தத்தில்
மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு மழைபொழிகிறதோவென்று
மந்திகள் வானுயர் மரமேறிக் காணும் திருவையாறு.

நவீனன் சொல்கிறான்:

அங்கே பெண்கள் மூளியென கல்தூண்களில் சிற்பமாகி ஆடுகிறார்கள்
முழவின் தோல் உரிந்து உடைந்து பல நூற்றாண்டு ஆகிவிட்டது
மேகங்கள் பருவ காலங்களிலும் தம்மைத்தாமே அணைத்துக்கொள்வதில்லை
குரங்குகள் வானுயர்ந்த கட்டிடங்களில் ஏறி உணவுக்குத் தாவும் திருவையாறு.

உணவற்ற குரங்குகள் காவிரிக்குள் மெல்ல தாவுகின்றன
பஞ்சநதீஸ்வரர் வெளியே வராதபடி கோயில் நடை சார்த்தப்பட்டுவிட்டது
நீருக்குள் தாவிய குரங்குகள் மூழ்கி அடித்துச் செல்லப்படுகின்றன
அந்தப் படித்துறையில் அமர்ந்த
பரதேசி ஒருவன் அவற்றைப் பார்த்துச் சிரிக்கிறான்.

தூரத்தில்
நீரின்மேல் எழுகின்றன
வெண், செம்
தா
மரைகள்.


பிரசுரம்: கொம்பு, இதழ் 1, செப்டம்பர் 2011.

ஒரு கவிஞனின் புறப்பாடு மற்றும் பாசஞ்சர் ரயில் பற்றி *

அது பின்பனிக்காலம்.
ஒரு பாசஞ்சர் பயணிப்பதற்குச்
சமமானது ஒரு கவிஞனின் புறப்பாடு.
அறுதியிட்டுக் கூறமுடியாத மௌனம் அல்லது வேகம்.
ஒரு தாமரையிலிருந்து
ஒரு மலைக்குப் போய்க்கொண்டிருக்கும்
ஒரு பாசஞ்சரில் போய்க்கொண்டிருக்கும்
ஒரு அவன். மற்றும் அவன் பயணம் என்பது
ஒரு கல் அல்லது தாமரை அல்லது குழப்பமான அவன்.
ஒரு பாசஞ்சர் என்பது ஒரு தாமரை அல்லது ஒரு கல் மற்றும்
அந்தப் பிரதேசத்தில்
பாசஞ்சரின் சன்னலோரத்தில் அமர்ந்து
நிலக்காட்சியைத் தரிசித்தபடி கடந்துகொண்டிருந்தான்.
ஒரு மதியத்தில் ஒரு மலையில் இருந்து
சாய்ந்திரவேளையின் மதிப்புமிக்க ஏரியைக் கடந்து
நள்ளிரவு வரும்போது
தாமரையை வந்தடைந்தான். அவன் அதைத்
தூக்கும்போது ஒரு சின்னஞ்சிறு மலையாக இருந்தது
அதன் வாசனை பாசஞ்சராக இருந்தது.பிரசுரம்:  கொம்பு , இதழ் 1, செப்டம்பர் 2011.

Monday, 7 May 2012

கவிதையை வாசித்தல்ஒரு கவிதையை வாசித்தல் என்பது ஒரு
வார்த்தையின் உச்சியில் அமர்ந்தபடி நகரத்தை
நோட்டமிடுவது மற்றும் மேகமாகிக் கரைந்து
தரிசுநிலத்தை நனைப்பது மேலும் ஆற்றங்கரையில்
அமர்ந்தபடி மிதக்கும் பிணத்தைத் தரிசிப்பது
அல்லது ஒரு தேனடையை கலைப்பது தவிர ஒரு
வார்த்தைக் கொள்ளையனை ஆழ்ந்து ரசிப்பது பிறகு
நான் என் கவிதையை வாசிக்கிறேன் என்பது
ஒரு கண்ணாடியுள் இன்னொரு கண்ணாடி பிறப்பது
மேலும் உன் கவிதையை வாசிப்பது என்பது
நீரற்ற ஒரு பாழ்க்கிணற்றுள் சென்று வாழும்
ஒரு
பழுத்த வேப்பிலை அல்லது கடலுக்குள்
அலைந்து கொண்டிருக்கும்
ஒரு மரக்குதிரை


பிரசுரம் 361' ஜனவரி 2012.

சிறிய கடவுள்கள்பேருந்தில் போய்க்கொண்டிருந்தேன்
பக்கத்தில்
அமர்ந்திருப்பவர் உடம்பெல்லாம் புண்கள்.
சொரியாஸிஸ் என்று சொல்லிக்கொண்டார்.
அருவெறுப்புக் கூடி
அவர் அருகில் யாரும் அமரவில்லை
என் பக்கத்தில் அமர்ந்த
அவரின் புண்களில்
இரத்தம் கன்றி 
எவ்வளவு அழகாகச் சீழ் வடிகிறது பாருங்கள்
எவ்வளவு துர்நாற்றம் வீசுகிறது முகருங்கள்
புண்களை
நான் சின்னஞ் சிறு கடவுளர்கள் என்பேன்
கடவுள்களே
கடவுள்களே
கொஞ்ச கொஞ்சமாய் 
அவர் உடம்பிலிருந்து இறங்கி
என் உடம்பிற்கு வந்துவிடுங்களேன்
அவர்
விரும்பாதது 
என் உடல் முழுவதும் 
ஆகட்டுமே.
பிரசுரம் தீராநதி ஏப்ரல் 2012.

நான் ஒரு தோல்வி அல்லது வெற்றி
நான் எப்போதும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன்
அப்போதெல்லாம் 
நான்
பிஞ்சிலிருந்து கனியாகிக் கொண்டிருக்கிறேன்
நான் எப்போதும் வென்று கொண்டே வருகிறேன்
அப்
போதெல்லாம்
 நான்  
சருகிலிருந்து 
இலைக்கு மாறிக் கொண்டிருக்கிறேன்.

பிரசுரம் தீராநதி ஏப்ரல் 2012

மரணச் சடங்கிற்குச் செல்லல்

ஒரு மரணச் சடங்கிற்கு
நானும் என் நண்பனும் போனோம்
அவர்கள் காத்திருந்தார்கள்
சின்னஞ் சிறிய சவக் குழியில் 
பிரேதத்தை வைத்திருந்தார்கள்
எவ் அளவு 
சிறிய எறும்பு அது 
ஒன்றும் சொல்வதிற்கில்லை
கிராமத்துச் சாலையில் போய்க்கொண்டிருக்கையில்
யாரோ மிதித்து இறந்துவிட்டதாம் அது.
என்ன செய்வது என்று 
மற்ற எறும்புகள் விக்கித்து நின்றன
அந்தச் சவக்குழியில் 
அதற்குப் பிடித்தமான
சர்க்கரை, தேன், சொர்க்கத்திற்குச்
செல்லும் வழியில் உண்பதற்கென்று
நான்கைந்து அரிசி மணிகள், சிறிதளவு எள்,
தண்ணீர்த் துளிகள்
சின்ன மூட்டையில் வைத்திருந்தார்கள்
பிறகு மண் அள்ளிக் குழியை நிரப்பினோம்
கருப்புத் தலைவர்கள் சாரைசாரையாகச்
சொல்லிக் கொள்ளாமல்
கலைந்துபோனபோது
நானும் என் நண்பனும் ஆற்றில் இறங்கி
தலைமுழுகி
சாலையில்
நடந்துசெல்லும்போது
யாரோ ஒருவரின் கால் விரல்கள் 
எங்கள் தலையை அழுத்தின
கண்டிப்பாக
அது மனிதரின் கால்கள் அல்ல.

பிரசுரம் தீராநதி ஏப்ரல் 2012.


வரம்

எனக்கு
கையளிக்கப்பட்ட கடலில்
உப்பு


இல்லை.


பிரசுரம் தமிழ்ப்பல்கலைக் கழக இதழ்

ரைட்டர்ஸ் ப்ளாக்

என்னால் எழுத முடிவதேயில்லை
ஒரு கருங்குருவி பாறைப் பிளவிலிருந்து வெளியேறுகிறது
என்னால் வாசிக்க முடிவதேயில்லை
ஒரு கருங்குருவி மரத்தின் மீதமர்ந்து பாறையைப் பார்க்கிறது
என்னால் எதையும் சிந்திக்க முடிவதேயில்லை
ஒரு கருங்குருவி பாறைப் பிளவுக்குள் சென்று அமர்ந்து விடுகிறது


பிரசுரம் : பண்புடன். காம்