Tuesday, 15 May 2012

இடாலியன் பேக்கரியில் வாழும் பூனை

அது இருட்டான ஒரு பேக்கரி.
அமர்ந்து குடித்துவிட்டுச் சட்டென்று செல்கிற அமைப்பு.
நாற்காலிகள் பாழ் அடைந்தவை
தரைகள் விரிசலிட்டுப் பாதாளம் பாய்பவை.
ஒரு பூனை அங்கு சுற்றித்திரிகிறது எதற்கென்று தெரியாமல்
அதை விரும்புபவர்களை அது விரும்புவதில்லை
அதை நேசிக்காதவர்களை அது செல்லமாக அழைக்கிறது
அவர்களின் கால்களை நக்கி, வாலால் துடைத்துவிடுகிறது
விருப்பமற்றவர்கள் எட்டி உதைக்கும்போது
அது அவர்களை ரௌத்ரமாக முறைக்கிறது
நாற்காலியின் கீழாக, மௌமாக உறைந்தபடி
வாழும்
அதன் மனோநிலை சமீபகாலமாக சரியில்லை
யாரிடமும் பேசாமல், யாரையும் கொஞ்சாமல்
எதிலும் பட்டும் படாமல்
திரிந்து வாழும் 
அந்தப் பூனை
இப்போது அங்கில்லை. அது
வழக்கம்போல் அமரும்
அந்த நாற்காலியில் வெறுமை படர்ந்திருந்தது.
எங்கிருந்தோ எழுகிறது பூனையின் சப்தம்
அதற்கென்று ஒரு பெயரில்லை.
நான் வைத்து அழைத்தேன் அதை:

நகுலன்


பிரசுரம்:  கொம்பு, இதழ் 1, செப்டம்பர் 2011.

ஒரு கவிஞனுக்கான மூடநம்பிக்கை

ஒரு கவிஞன் எனில்
கட்டாயம் மூடநம்பிக்கையில் வாழ்பவனாக வேண்டும்
எழுதும்போது அல்லது வாசிக்கும்போது அல்லது சிந்திக்கும்போது

ஒருவன் எழுதிக் கொண்டிருந்தபோது
சரியான வார்த்தையோ, வடிவமோ சிக்கவில்லை
என்றானபோது
அவன் தேநீர்க் கடைக்கு முன்பாகக் காத்திருந்தான்.
மிகக் குழப்பமான வார்த்தைகளால், வடிவத்தால், விஷயத்தால்
சிக்குண்டவன் இப்போது தனக்குள் சிக்கியபடி காத்திருந்தான்.

வழக்கம்போல்
அங்கே நுழைந்த பைத்தியம் பிடித்த பிச்சைக்காரன்
முதலாளியிடம் மன்றாடிப் பெற்ற ஒரு கண்ணாடித் தம்ளரில்
தேநீரக் குடித்து வைத்துவிட்டுப் போகிறான்
எச்சில் பட்ட கிளாஸை முதலாளி கழுவ எத்தனிக்கிறான்.
அங்கே நுழைந்த கவிஞன்
அந்த எச்சில் கிளாஸைத் தொட்டுவிட்டு, அதைக்கழுவி,
அதில் தேனீர்த் தரும்படி வேண்டுகிறான்.
பைத்தியம் பிடித்த, பிச்சைத்தனமான கிளாஸில்
தே
நீர்
அருந்திவிட்டு
எழுதத் தொடங்கினான்
சிக்கல் தீர்ந்த
நம் போன்ற ஒரு கவிஞன்.பிரசுரம்:  கொம்பு, இதழ் 1, செப்டம்பர் 2011.

திருவையாறு (செவ்வியல் பிரதியும் நவீன பிரதியும்)

திருஞானசம்பந்தன் சொன்னான்:

அங்கே பெண்கள் நடனமாடும் சலங்கையோசை எங்கும் எதிரொலிக்கிறது
முழவின் சத்தம் எங்கும் ஒலிந்து அலைய, அச்சப்தத்தில்
மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு மழைபொழிகிறதோவென்று
மந்திகள் வானுயர் மரமேறிக் காணும் திருவையாறு.

நவீனன் சொல்கிறான்:

அங்கே பெண்கள் மூளியென கல்தூண்களில் சிற்பமாகி ஆடுகிறார்கள்
முழவின் தோல் உரிந்து உடைந்து பல நூற்றாண்டு ஆகிவிட்டது
மேகங்கள் பருவ காலங்களிலும் தம்மைத்தாமே அணைத்துக்கொள்வதில்லை
குரங்குகள் வானுயர்ந்த கட்டிடங்களில் ஏறி உணவுக்குத் தாவும் திருவையாறு.

உணவற்ற குரங்குகள் காவிரிக்குள் மெல்ல தாவுகின்றன
பஞ்சநதீஸ்வரர் வெளியே வராதபடி கோயில் நடை சார்த்தப்பட்டுவிட்டது
நீருக்குள் தாவிய குரங்குகள் மூழ்கி அடித்துச் செல்லப்படுகின்றன
அந்தப் படித்துறையில் அமர்ந்த
பரதேசி ஒருவன் அவற்றைப் பார்த்துச் சிரிக்கிறான்.

தூரத்தில்
நீரின்மேல் எழுகின்றன
வெண், செம்
தா
மரைகள்.


பிரசுரம்: கொம்பு, இதழ் 1, செப்டம்பர் 2011.

ஒரு கவிஞனின் புறப்பாடு மற்றும் பாசஞ்சர் ரயில் பற்றி *

அது பின்பனிக்காலம்.
ஒரு பாசஞ்சர் பயணிப்பதற்குச்
சமமானது ஒரு கவிஞனின் புறப்பாடு.
அறுதியிட்டுக் கூறமுடியாத மௌனம் அல்லது வேகம்.
ஒரு தாமரையிலிருந்து
ஒரு மலைக்குப் போய்க்கொண்டிருக்கும்
ஒரு பாசஞ்சரில் போய்க்கொண்டிருக்கும்
ஒரு அவன். மற்றும் அவன் பயணம் என்பது
ஒரு கல் அல்லது தாமரை அல்லது குழப்பமான அவன்.
ஒரு பாசஞ்சர் என்பது ஒரு தாமரை அல்லது ஒரு கல் மற்றும்
அந்தப் பிரதேசத்தில்
பாசஞ்சரின் சன்னலோரத்தில் அமர்ந்து
நிலக்காட்சியைத் தரிசித்தபடி கடந்துகொண்டிருந்தான்.
ஒரு மதியத்தில் ஒரு மலையில் இருந்து
சாய்ந்திரவேளையின் மதிப்புமிக்க ஏரியைக் கடந்து
நள்ளிரவு வரும்போது
தாமரையை வந்தடைந்தான். அவன் அதைத்
தூக்கும்போது ஒரு சின்னஞ்சிறு மலையாக இருந்தது
அதன் வாசனை பாசஞ்சராக இருந்தது.பிரசுரம்:  கொம்பு , இதழ் 1, செப்டம்பர் 2011.

Monday, 7 May 2012

கவிதையை வாசித்தல்ஒரு கவிதையை வாசித்தல் என்பது ஒரு
வார்த்தையின் உச்சியில் அமர்ந்தபடி நகரத்தை
நோட்டமிடுவது மற்றும் மேகமாகிக் கரைந்து
தரிசுநிலத்தை நனைப்பது மேலும் ஆற்றங்கரையில்
அமர்ந்தபடி மிதக்கும் பிணத்தைத் தரிசிப்பது
அல்லது ஒரு தேனடையை கலைப்பது தவிர ஒரு
வார்த்தைக் கொள்ளையனை ஆழ்ந்து ரசிப்பது பிறகு
நான் என் கவிதையை வாசிக்கிறேன் என்பது
ஒரு கண்ணாடியுள் இன்னொரு கண்ணாடி பிறப்பது
மேலும் உன் கவிதையை வாசிப்பது என்பது
நீரற்ற ஒரு பாழ்க்கிணற்றுள் சென்று வாழும்
ஒரு
பழுத்த வேப்பிலை அல்லது கடலுக்குள்
அலைந்து கொண்டிருக்கும்
ஒரு மரக்குதிரை


பிரசுரம் 361' ஜனவரி 2012.

சிறிய கடவுள்கள்பேருந்தில் போய்க்கொண்டிருந்தேன்
பக்கத்தில்
அமர்ந்திருப்பவர் உடம்பெல்லாம் புண்கள்.
சொரியாஸிஸ் என்று சொல்லிக்கொண்டார்.
அருவெறுப்புக் கூடி
அவர் அருகில் யாரும் அமரவில்லை
என் பக்கத்தில் அமர்ந்த
அவரின் புண்களில்
இரத்தம் கன்றி 
எவ்வளவு அழகாகச் சீழ் வடிகிறது பாருங்கள்
எவ்வளவு துர்நாற்றம் வீசுகிறது முகருங்கள்
புண்களை
நான் சின்னஞ் சிறு கடவுளர்கள் என்பேன்
கடவுள்களே
கடவுள்களே
கொஞ்ச கொஞ்சமாய் 
அவர் உடம்பிலிருந்து இறங்கி
என் உடம்பிற்கு வந்துவிடுங்களேன்
அவர்
விரும்பாதது 
என் உடல் முழுவதும் 
ஆகட்டுமே.
பிரசுரம் தீராநதி ஏப்ரல் 2012.

நான் ஒரு தோல்வி அல்லது வெற்றி
நான் எப்போதும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன்
அப்போதெல்லாம் 
நான்
பிஞ்சிலிருந்து கனியாகிக் கொண்டிருக்கிறேன்
நான் எப்போதும் வென்று கொண்டே வருகிறேன்
அப்
போதெல்லாம்
 நான்  
சருகிலிருந்து 
இலைக்கு மாறிக் கொண்டிருக்கிறேன்.

பிரசுரம் தீராநதி ஏப்ரல் 2012

மரணச் சடங்கிற்குச் செல்லல்

ஒரு மரணச் சடங்கிற்கு
நானும் என் நண்பனும் போனோம்
அவர்கள் காத்திருந்தார்கள்
சின்னஞ் சிறிய சவக் குழியில் 
பிரேதத்தை வைத்திருந்தார்கள்
எவ் அளவு 
சிறிய எறும்பு அது 
ஒன்றும் சொல்வதிற்கில்லை
கிராமத்துச் சாலையில் போய்க்கொண்டிருக்கையில்
யாரோ மிதித்து இறந்துவிட்டதாம் அது.
என்ன செய்வது என்று 
மற்ற எறும்புகள் விக்கித்து நின்றன
அந்தச் சவக்குழியில் 
அதற்குப் பிடித்தமான
சர்க்கரை, தேன், சொர்க்கத்திற்குச்
செல்லும் வழியில் உண்பதற்கென்று
நான்கைந்து அரிசி மணிகள், சிறிதளவு எள்,
தண்ணீர்த் துளிகள்
சின்ன மூட்டையில் வைத்திருந்தார்கள்
பிறகு மண் அள்ளிக் குழியை நிரப்பினோம்
கருப்புத் தலைவர்கள் சாரைசாரையாகச்
சொல்லிக் கொள்ளாமல்
கலைந்துபோனபோது
நானும் என் நண்பனும் ஆற்றில் இறங்கி
தலைமுழுகி
சாலையில்
நடந்துசெல்லும்போது
யாரோ ஒருவரின் கால் விரல்கள் 
எங்கள் தலையை அழுத்தின
கண்டிப்பாக
அது மனிதரின் கால்கள் அல்ல.

பிரசுரம் தீராநதி ஏப்ரல் 2012.


வரம்

எனக்கு
கையளிக்கப்பட்ட கடலில்
உப்பு


இல்லை.


பிரசுரம் தமிழ்ப்பல்கலைக் கழக இதழ்

ரைட்டர்ஸ் ப்ளாக்

என்னால் எழுத முடிவதேயில்லை
ஒரு கருங்குருவி பாறைப் பிளவிலிருந்து வெளியேறுகிறது
என்னால் வாசிக்க முடிவதேயில்லை
ஒரு கருங்குருவி மரத்தின் மீதமர்ந்து பாறையைப் பார்க்கிறது
என்னால் எதையும் சிந்திக்க முடிவதேயில்லை
ஒரு கருங்குருவி பாறைப் பிளவுக்குள் சென்று அமர்ந்து விடுகிறது


பிரசுரம் : பண்புடன். காம்