Wednesday, 9 October 2013

இலக்கியம் ஏன் வாசிக்கப்படவேண்டும்?

மிக எளிமையான இந்தக் கேள்வியிலிருந்தே நாம் இந்த விஷயத்தை ஆரம்பிக்கலாம். பால்ய காலத்திலிருந்தே நாம் வாசிக்கத் தொடங்கிவிடுகிறோம். அப்போது நம் கையில் தவழுவது சின்னஞ்சி சிறு குட்டிக் கதைகள் தாங்கிய ராணி காமிக்ஸோ, அம்புலிமாமாவோ, பாலமித்ராவோ. அது எதுவாகவும் இருக்கட்டும். ஒன்றை மட்டும நினைவுப்படுத்திப் பாருங்கள். அந்தப் பால்ய வயதில் நாம் அண்டங்களின் தோற்றம் பற்றியோ, உலகத்தின் வரலாற்றையோ படிப்பதில்லை. வாசித்தாலும் நம் மனதில் படிவதில்லை. நம் கைகள் தாங்கும் புத்தகத்தில் குதிரையின் குளம்படியோசையையும், மரங்கள்மேல் அமர்ந்த பறவைகளின் ஓசையையும், மலர்களின் சுகந்தத்தையும் நாம் உணர்கிறோம்... பார்க்கிறோம். வார்த்தைகளால் சொல்லமுடியாத கற்பனைகளில் நாம் சஞ்சரிக்கிறோம். இனம்புரியாத உணர்ச்சியில் நாம் சந்தோஷப்படுறோம். எது உங்களை சந்தோஷப்படுத்துகிறது? அந்த உணர்ச்சிதான் இலக்கியமாகக் கருதப்படுகிறது.
அறிவியல், வரலாறு, புவியியல், கணிதம் தராத ஓர் இன்பத்தை இலக்கியம் தருகிறது. மனித குலத்தின் தோற்றத்தைப் பற்றி ஒருவர் வாசிப்பதற்கும், அவரே ஒரு அருவியின் ஓழுங்கைப் பற்றிய விவரணையை வாசிப்பதற்கும் பெருத்த வேறுபாடு உணர்கிறார். மன நெகிழ்வைத்தான் இலக்கியம் உண்டாக்குகிறது.
ஆதிமனிதன் குரங்கிலிருந்து பிறந்தான். குரங்கின் பரிணாமமே மனிதன். குரங்குகளில் இப்போது பல வகைத்தோற்றம் உண்டு. இந்தியக் குரங்குகளுக்கும் ஆப்பிரிக்க குரங்குகளுக்கும் தோற்றத்தில் பல வேறுபாடு உண்டு. கருங்குரங்கு, செம்முகக்குரங்கு, சிங்கவால் குரங்கு என்று பல. குரங்கின் பல குணங்கள் மனிதர்களுடன் ஒத்துப் போகின்றன. அவை கூட்டங்கூட்டமாக வாழும்.
கோடைக் காலம். வெப்பத்தைத் தாங்கமுடியவில்லை. பட்டுப்போன மரத்தின் மேல் அமர்ந்த பெண் குரங்கு தாகத்தில் தள்ளாடுகிறது. ஆண்குரங்கு அதைப்பார்த்து ஏக்கம் கொள்கிறது. உடனே, வானத்தின்மேல் தாவுகிறது. அங்கே மிதந்தபடி சென்றுகொண்டிருக்கும் ஒரு மேகத்தைப் பிழிகிறது. சொட்டுச் சொட்டாக விழும் மழைத்துளியைப் பெண்குரங்குப் பருகித் திளைக்கிறது. ஆண்குரங்கைக் கட்டி அணைக்கிறது.
இந்த இரண்டு விவரிப்புகளில் முதலாவது அறிவு சார்ந்தது. இரண்டாவது கற்பனைக் காட்சி. அறிவு சார்ந்த விஷயம் நமக்குள் எதையும் சலனப்படுத்தவில்லை. அது ஒன்றைப் பற்றிய தகவலாக மனதில் பதிந்துவிடுகிறது. ஆனால் இரண்டாவது பத்தி நமக்குள் ஓர் இன்பத்தை உருவாக்கிவிடுகிறது. இரண்டாவது விஷயம் நடக்கப்போவதில்லை. ஆனால் நடந்தால் நன்றாக இருக்கும் என்றோ, இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்றோ எழுதப்பட்டிருக்கலாம். இந்தக் கற்பனையில் இரண்டு விஷயங்கள் தெரிகின்றன. கோடைக்காலத்தில் நீர் இருப்பதில்லை. யாவும் வறண்டுவிடுகின்றன. விலங்குகளை அது பாதிக்கிறது. படைப்பாளி இரண்டையும் இணைத்துக் கற்பனையாக எழுதுகிறான். கற்பனை வழியாக ஒரு மீட்சி உண்டாகிறது. குரங்கின் தாகம் அடங்குகிறது. தூய அன்பின் அடையாளமே, ஆண்குரங்கின் செயல். இதைத்தான் மனித குலத்திற்கு நேரடியாகவோ, கற்பனையாகவோ இலக்கியம் சொல்கிறது. ராமாயணக் கதையிலும், பாரதக் கதையிலும் பாருங்கள். மனித குணங்கள் எப்படி எப்படி வேறுபட்டுச் சிதறிக் கிடக்கின்றன. எவ்வளவு குற்றம் செய்கின்றன? எத்தனை மனிதர்கள் உதவுகின்றனர்? இதைத் தான் பேரிலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் சித்தரிக்கின்றன.
வீசும் காற்றுதான் சிவன் என்றும், கற்பூரத்தின் நறுமணம்தான் பெருமாளின் வாய்நாற்றம் என்று கூறுவதுதான் இலக்கியம். களவு, காமத்தையும் ஒழித்துவிடு என்பதுதான் இலக்கியம். ஒரு மனிதனின், ஒட்டுமொத்த சமூகத்தின் அகத்தை உணர்வைப் பிரதிபலிப்பதுதான் இலக்கியம். கதையாகவும் கவிதையாகவும் நாவலாகவும் அது வெவ்வேறு வடிவத்தில் இதைத்தான் போதிக்கிறது. மனித குல ஆன்மாவைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாக உள்ளதுதான் இலக்கியம்.
ஆதிகாவியமாகக் கருதப்படும் கில்காமேஷ் என்பதிலிருந்து தற்போது படைக்கப்படும் இலக்கியம் வரை எதுவானாலும், போதிக்கப்படுவது ஒன்றே ஒன்று. அது மாறாத அன்பு.
அழகியலையும் தத்துவத்தையும் பின்னிப் பிணைந்து ரசனையுடன் அமைவைதான் இலக்கியம். கற்பனையின் ஊடே நாம் இப்பிரபஞ்சத்தின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள இலக்கியம் பயன்படுகிறது. செம்பருத்தியின் வடிவத்தைப் பற்றிய ஆராய்ச்சிதரும் இன்பத்தைவிட, அதன் நிறம், அழகு, நறுமணம் பற்றிய எழுத்து, நமக்குள் விளைவிக்கும் ஒருவித இன்பமே இலக்கியமாகிறது. தொடு உணர்ச்சிபோன்றேதான் மன உணர்ச்சி. இந்த மன உணர்ச்சிதான் இலக்கியம்.
சரி. மீண்டும கேள்விக்கு வருவோம்? ஏன் இலக்கியம் வாசிக்கப்படவேண்டும்? ஒரு வரலாறு, புவியியல் நூல் தராத, கணித சூத்திரங்கள் தராத, அறிவியல் சிந்தனைகள் தராத ஓர் உணர்வை இலக்கியம் தருகிறது என்பதால் இலக்கியம் வாசிக்கப்படவேண்டும்.
ஒரு பறவையின் சிறகடிப்பையோ, கூழாங்கல்லின் மௌனத்தையோ, ஒரு புள்ளிமானின் தாவலையோ, ஒரு மழைத்துளியின் அழகையோ, கடலின் பெருங்கோபத்தையோ இலக்கியம் அல்லாத நூல்களால் சொல்லமுடிவதில்லை. அதை இலக்கியம்தான் நமக்குள் சித்திரமாக வரைந்துவிடுகிறது.
வாழ்வின் ரசனை மிக்க விஷயங்களை, அன்பை, எதிர்பார்ப்பை, மனிதகுலம் தவறிய பாதைகளை, வாழவேண்டிய திசைகளை இலக்கியம் கைபிடித்து அழைத்துச் சென்று காட்டுகிறது. அனுபவத்தின் கிழவனாகி, சின்னஞ்சிறு பேரனாகிய நம்மை அன்புடன் ஆராதித்து அழைத்துச் செல்கிறது. எதை நாம் இழந்துவிட்டோமோ, எதை நாம் இழந்துகொண்டிருக்கிறோமோ அதை மௌனமாகச் சொல்கிறது. எதை நாம் கைக்கொள்ளவேண்டுமோ அதையும் சொல்கிறது. கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை என்ற பல்வேறு நிழல்களில் நடமாடும் அனுபவம்தான் இலக்கியம். மனிதகுல உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் பச்சை ரத்தம் அது.
ரஷ்யாவின் பனியை நேரில் பார்த்திருக்கமாட்டோம் நாம். இந்தியாவை ஒத்த நிலச்சூழலையுடைய லத்தீன் அமெரிக்காவைத் தரிசித்திருக்கமாட்டோம் நாம். அண்டைவீட்டானிடம் நாம் அண்டிப் பேசுவதில்லை நாம். ஒரு நாட்டின் இயற்கையை, மனித குணங்களை, வாழும் முறைகளை, அவர்களின் பண்பாட்டு வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை, மூடநம்பிக்கைகளை நாம் உணர உதவும் ஒரே வழிதான் இலக்கியம். ரஷ்யக் கதைகள் பனியில் வெம்மையையும், லத்தீன் அமெரிக்க கதைகள் வெப்பத்தில் குளுமையையும் காணச் செய்கினற்ன. எனவேதான் நாம் இலக்கியம் வாசிக்கவேண்டும்.
எப்படி வாழ்ந்தோம்? எப்படி வாழ்கிறோம்? எப்படி வாழவேண்டும்? என்று சொல்வதுதான் இலக்கியம். பேராசைகளால் அழிந்துகொண்டிருக்கும் மனித குலத்திற்கு அழகியலையும் ஆன்மிகத்தையும் ரசனையையும் கற்றுத்தருவதுதான் இலக்கியம். எந்த வரலாற்று நூலும் இலக்கியத்தைத் தருவதில்லை. ஆனால் இலக்கியம்தான் வரலாற்றை விமர்சிக்கிறது. பண்பாட்டு விழுமியங்களை தனக்குள் விவரிக்கிறது.
இலக்கியம் என்பது வேறு எதுவுமில்லை. அது மனிதகுலத்தின் மனசாட்சி. பிரபஞ்சத்தில் தூய்மையை விரும்பும் ஆன்மா. நம் மனதின் மேல் விழும் ஓர் அருவி.

September 30, 2013 on tamil.thehindhu.com

Saturday, 30 March 2013

முத்துக் கறுப்பன் என்னும் வாசகன்தமிழில் மிகச் சிறந்த கதையாசிரியரும் சிறுபத்திரிகையாளருமான மா. அரங்கநாதனின்  இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு இது.  இந்தத் தொகுதியில் மொத்தம் 21 கட்டுரைகள். பெரும்பாலானவை கவிதைத் தொகுதி அல்லது கவிதைகளைக் குறித்த கட்டுரைகள். பேட்டி, கதை, நினைவுகள் என்ற அமைப்பில் சில கட்டுரைகள்.  கவிதை, சிறுகதை, நினைவுகள் என்ற மூன்றாகப் பிரித்துப் பேசலாம்.  இந்தப் பிரிப்பு இப்புத்தகத்தில் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கவிதைகள் பற்றி கட்டுரைகளில், இளையபாரதி, வஸந்த் செந்தில், கனிமொழி, ஸ்ரீநேசன், ரிஷி என்கிற அனாமிகா, ரவிசுப்ரமணியன், பழமலய், தமிழச்சி, புதுவை இளவேனில், ம. தவசி ஆகியோரின் கவிதைத் தொகுதிகளில் உள்ள கவிதை ஒன்றினை எடுத்து விளம்புகிறார்.  தான் மேற்கோள் காட்டும் கவிதையைச் சொல்வதற்கான காரணம் முதல் அது தந்த அனுபவம் வரை விரிவாகப் பேசுகிறார் . இதை வியாக்யானம் என்று சொல்வதற்குப் பதிலாக, வாசிப்பின் அனுபவம் என்று எடுத்துக்கொள்ளலாம். ஏதாவது ஒரு கவிதையை எடுத்துப் பேசும் போது அக் கவிதையைப் பொதுவாழ்வனுபவத்திலிருந்து பேசுகிறார். சில கவிதைகளின் தன்மையைச் சுருக்கமாகத் தெளிவாக்குகிறார்.  உதாரணத்திற்கு இந்தக் கவிதை  பெரியதொரு இழப்பை அனுபவித்த ஒருவனின் கூப்பாடுஎன்று இளையபாரதியின் அனுபவத்தைக்கூறுவது போதுமானது. ஒரு கவிதையைப் பற்றிச் சொல்வதற்குமுன், அக் கவிஞரைப் பற்றிய அறிமுகத்திலிருந்து தொடங்குகிறார்.  கவிஞர் வஸந்த் செந்தில் பற்றிக் கூறும்போது, அவரின் லௌகீக வாழ்க்கைப் பணி, அவர் எழுதிய கவிதைத் தொகுதிகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் பற்றிக் கூறிவிட்டு, அக்கவிதை விதந்தோதுகிறார். 

வஸந்த் செந்திலின் மிருகபாலிகை கவிதைத் தொகுதியின் மையத்தைக் கூறிவிட்டு, ஒரு கவிதையை எடுத்துப் பகுதி பகுதியாகப் பிரித்து விளக்குகிறார்.  விளக்குதல் என்பது அவர் கவிதைகளை ரசித்த முறைமையே.  ஸ்ரீநேசனின் கவிதையை ஒன்றின் மையம் அன்பு குறித்தது என்று சொல்லிவிட்டு, ஏசு, ஜே.கிருஷ்ணமூர்த்தி, வள்ளுவர் அன்பைப் பற்றிச் சொன்னதிலிருந்து கவிஞர் எவ்வாறு மாறுபடுகிறார் என்பதை விளக்குகிறார்.  அக்கவிதையை வாசித்தபின், தன் கடவுளை அழைத்த தருணத்தைச் சொல்கிறார் மா. அரங்கநாதன்.  மேலும் ஜம்ப் கட் என்ற சினிமா உத்தியை இக்கவிதை எழுதுதல் தொழில் நுட்பத்துடன் இணைத்து மெருகேற்றுகிறார். ரிஷி யின் கவிதை ஒன்றினைப் பற்றிப் பேசும்போது, உண்மையான விடுதலை உணர்வு அவர் கவிதையில் மிளிர்வதைக் கூறுகிறார்.  அவர் கவிதைகளில சொல் ஒரு மாயாஜாலம் நிகழ்த்துவதைக் கூறுகிறார்.  ரிஷியின் கவிதையை வாய்விட்டு வாசிக்கும்போது சப்தநயத்துடன், கவிதையில் ஒளிந்துள்ள பகடித்தன்மை பற்றிப் பேசுகிறார். த.பழமலய்யின் கவிதைத் தொகுதியைப் பற்றிப் பேசும்போது, அவருடைய முன் தொகுதியில் உள்ள கோபம், தற்போது பரிகாசமாக மாறியுள்ளதைக் குறிப்பிடுகிறார்.   மின்காந்தசக்தி மிக்க பாம்படங்கள் கலாச்சாரம் தற்போது அழிந்துவிட்டதைத் தமிழச்சியின் கவிதையான பாம்படங்கள் பற்றிக் கவிதையொன்றில் குறிப்பிடுவது மட்டுமல்லாது, பாம்படத்தின் வரலாற்றைச் சுருக்கமாக விவரித்துவிடுகிறார் கட்டுரையாளர்.  தன் அனுபவத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருக்கும்போது புதுவை இளவேனில், ம. தவசி கவிதைகளை மேற்கொள்கிறார்.     

அடுத்ததாக, மூன்று கதைகள்.  பிரபஞ்சனின் ‘மீன்  கதையைப் பற்றிப் பேசும்போது, புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற கதையை எத்தனைமுறை வாசித்தேன் என்பது நினைவில்லை என்பதுபோலவே மீன் கதையும் என்கிறார் ஆசிரியர். இக் கதையைப் பற்றி நூறு பக்கத்தில் எழுதவேண்டியது என்றவர் மூன்று பக்கத்தில் அதைச் சுருக்கிச் சொல்லிவிட்டார்.  மீன் கதைப்பற்றிக் கூறும்போது, வெளிச்சத்தை இருட்டைக்கொண்டு விளக்குவது போல அல்லது இருட்டை வெளிச்சம்கொண்டு விளக்குவது போல இருப்பதாகக்  குறிப்பிடுகிறார்.  நகுலன் வாக்குமூலம் நாவல் பதிப்புப் பற்றிக் கூறத் தொடங்கியவர், அவரின் படைப்பு மையம், சொல்லும் முறைமைகளைப் பாராட்டுகிறார். பூனையும் மனிதரும் ஒன்றுதான் நகுலனுக்கு என்று கூறிவிட்டு, அவர் கதைகள் பற்றி விமர்சனம் செய்ய குறுகிய காலம் போதாது என்கிறார். பிரமிளின் பிரசன்னம் கதையை எவ்வாறு வைதீக எதிர்ப்பாக இருக்கிறது என்று கூறிவிட்டு, அக் கதையில் வரும் அழகிய நம்பியை, புற்றுநோயால் இறந்த தன் நண்பன் எழுத்தாளர் கிருஷ்ணன்நம்பியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பரிதவிக்கிறார். ஐம்பது வருடத்திற்குமுன் வந்த வெளிநாட்டுப்படம் ஸ்டீல் டிராப்.  மனித இயந்திரம் பற்றிய கதை இது.  இப்படத்தில் வரும் பாத்திரத்திற்கும், மௌனியின் மனித இயந்திரத்திற்கும் வேறுபாடு இல்லை என்கிறார் மா. அரங்கநாதன்.  ஆங்கிலேயனுக்கு முன்பாகவே தமிழன் முன்னேறிவிட்டான் என்று பெருமைப்படுகிறார் இவர்.

பிறகு இன்னொரு பகுதி, நினைவுகள். முன்றில் இதழின் தொடக்கம் முதல் இறுதி இதழ் வரையில் பங்கேற்ற படைப்பாளர்கள் பற்றியும், இதழ்களில் வெளியிட்டவை பற்றியும் விவரித்துள்ளார்.  இதை நாம் ‘முன்றில்: ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்றே கொள்ளவேண்டும்.   ஓவியர் ஆதிமூலத்தைப் பற்றிய நினைவில், அவருடன் அதிகமாகப் பேசியதில்லை என்றபோதிலும், அவருக்கு ஒரு வித நட்பு நிலவுவதைக் குறிப்பிடுகிறார். ஆதிமூலத்தின் கோடுகளும் வண்ணங்களும், எழுத்துக்களை விட ஆயிரம்  மடங்கு அதிகமாகச் சொல்லி நிற்கும் என்று கட்டுரையை முடிக்கிறார்.

கடைசியாக, ஒரு பேட்டி.  இனிய உதயம் இதழில் 2008ல் வெளியானது.  அவர் எழுத்தை மையமிட்டுக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலில் சில செய்திகள் கிடைக்கின்றன.  அவருடைய சைவ சித்தாந்தம், சினிமா ஈடுபாடு, முன்றில் இதழின் செயல்பாடு, உடல் அரசியல் பேசும் பெண் கவிஞர்களை ஆதரிப்பதற்கான காரணங்கள், ஜோதிட ஈடுபாடு, முத்துக் கருப்பன் என்பவன் யார்? என்பவைதாம் இவை. 

இக்கட்டுரைத் தொகுதியை வாசித்தபோது, சித்தாந்த அடிப்படையிலும், வாழ்வின் அனுபவத்திலும் படைப்பை உள்வாங்கும் மா. அரங்கநாதனின் மனம் தெரிகிறது.  ‘உண்மையோடு உறவு வைத்துக் கொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லைஎன்ற  மா. அரங்கநாதன் கட்டுரைகள், பொய்மை அறியாதவை. அல்லது தன் அனுபவத்தின் வழியே அல்லது படைப்பின் அனுபவத்தில் தன்னைக் காண்பது என்கிற தன்மை வெளிப்படுகிறது.  மா. அரங்கநாதனின் உண்மை என்பது சித்தாந்தம் எனலாமோ?  ஆனால் முத்துக்கறுப்பன் என்கிற மா.அரங்கநாதன் வெளியே சொல்லமுடியாத உணர்வுகளை, மற்ற எழுத்தில் பார்த்தவர், பார்ப்பவர். 

தமிழ் நவீன கவிதையைப் பற்றிப் பேசுபவர் சிலரே. கவிதையை எவ்வாறு ரசிப்பது என்பதை நாம் விக்ரமாதித்தியனிடம் கற்றுக்கொண்டால், கவிதையின் சித்தாந்தத்தை எவ்வாறு உணரவேண்டும் என்பதை நாம் ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளலாம்.  கற்றுக்கொள்ள இருக்கிறது.

புது எழுத்து இதழ் 21ல் வெளியானது

(கடவுளுக்கு இடங்கேட்ட கவிஞன்/ மா. அரங்கநாதன்/ காவ்யா/மு.ப. 2008/ ரூ.60/-)

Saturday, 16 March 2013

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக் குருவி - வா.மணிகண்டன்மரண வீட்டின் குறிப்புகள்

ராணிதிலக்


ந்தப் புத்தாண்டில் வெளியான கவிதைத்தொகுதிகளில் ஒன்றான வா.மணிகண்டனின் என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி பற்றி இப்பொழுது உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். அதற்குமுன்பு இத்தொகுதியின் சில கவிதைகளை வாசிக்க விரும்புகிறேன்.

மூன்று தினங்களாக உங்களை அழைத்துக்கொண்டிருப்பவன்

மூன்று தினங்களாக
உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் அவனுக்கு
பெயர் எதுவுமில்லை
ஓவ்வொருவரின் பெயரையும்
அவர்கள் திரும்பிப்பார்க்கும் வரை உச்சரித்துவிட்டு
பிறகு சலனமில்லாமல் நகர்ந்துவிடுகிறான்
இதுவரை நீங்கள் திரும்பிப்பார்க்காதது குறித்த
எந்த வருத்தமுமற்ற அந்த மனிதன்
தன்
ஈரம் வற்றிய குரலில்
உங்களின் பெயரை
கமறிக் கொண்டிருக்கிறான்
உங்களை அழைப்பதற்கு முன்பாக
எதிர்வீட்டு கணித ஆசிரியரை அழைத்திருந்தான்
குழப்பத்தில் ஸ்கூட்டரில் இருந்து விழுந்தவர்
டெட்டால் வாசனை வீசிக்கொண்டிருக்கும்
மண்டை காயத்துடன் பரிந்துரைக்கிறார்
அவனை நீங்கள் திரும்பிப்பார்க்க வேண்டுமென
எதைப்பற்றியும் கவலையுறாத
நீங்கள்
நெற்றியில் மூன்றாவது கண் முளைக்கத் தொடங்கும்
என நம்பிக் கொண்டிருக்கையில்
நிலவும் வெள்ளியும்
இன்றிரவு
நேர்கோட்டில் வருவதாகச் சொல்லிக்கொண்டிருப்பவர்
பெட்ரோலை ஊற்றி முடித்திருந்தார்
உங்களின் தலையுச்சியில்

இந்த வருடத்தின் முதல் தற்கொலைஉங்கள் மீதான அதீத நம்பிக்கையில்
என் அந்தரங்கங்களை
பூட்டாமல் விட்டுச் செல்கிறேன்
அல்லது
ரகசிய அறையின் சாவியை
உங்களிடமே கொடுத்து வைத்திருக்கிறேன்.

நான் இல்லாத நேரத்தில்
மிக அவசரமாக
என் ரகசியங்களை சோதனையிடுகிறீர்கள்

எப்பொழுதும்
என்னுடையதாகவே
இருந்திருக்க வேண்டிய
அந்தரங்கங்கள்
இப்பொழுது
நம்மிடையே
பொதுவானதாகிறது.

நேர்த்தியாக என் குற்றங்களை வரிசைப்படுத்துகிறீர்கள்
எனக்கு எதிராக எழுப்ப வேண்டிய வினாக்களை
தயார்படுத்துகிறீர்கள்
வினாக்களுக்கு தரப்படும் பதில்களை பொறுமையாக
பெற்றுக் கொள்ளும் நீங்கள்
அதே வினாக்களை வேறுபடுத்திய வரிசைகளில்
திரும்ப
என் கண்களை நோக்கி செலுத்துகிறீர்கள்
நான் தலை குனியத் துவங்கும் போது
உங்களின் வேகம் அதிகரிக்கிறது.

நான் தோல்வியடைகிறேன்.

என்னிடமிருந்து
கண்ணீர் பெருகும்
கணத்திலிருந்து
நான்
நசுக்கப்படுகிறேன்

உங்களுக்கும் எனக்கும்
இடையில்
கட்டப்பட்ட
எனது பிம்பம்
சிதைந்து
கொண்டிருக்கிறது.

எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்ள
தயாராகிறேன்.
கைகளை கிழித்துக் கொள்வதோ
அல்லது
நெருப்பினில் விரல் வைப்பதோ
உங்களை ஆசுவாசப்படுத்தும்
என நினைக்கிறேன்.

நீங்கள்
எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

வினாக்கள்
இன்னொரு வரிசையில்
விழத் துவங்குகின்றன.

நான் ரகசியமாக
வைத்திருந்த சிறகுகள்
கத்தரிக்கப்படுகின்றன.

எனது வானத்தில்
பறந்து கொண்டிருந்த
சிறு பறவைகளை
சுட்டு வீழ்த்துகிறீர்கள்.

எனது பாடல் வரிகள்
களைத்தெறியப்படுகின்றன.

நான்
உடைந்து கொண்டிருக்கிறேன்.
அல்லது
நொறுங்கிக் கொண்டிருக்கிறேன்

வீதிகளில்
எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள்.

ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
ஒன்று

பட்டாசுகள் வெடிக்கத் துவங்குகின்றன.

இப்பொழுது
என் அறை சாத்தப்படுகிறது
மெதுவாகதுளிகள்
(1)
ஹெல்மெட்
கண்ணாடி வழியே
பார்த்துக் கொண்டிருக்கிறான்-
நசுங்கிய கால்.


(2)
எந்த நடிகையும்
அழுவதில்லை-
என் அறைச் சுவர்களில்

(3)
வியர்வையில்
நெளிகிறாள்-
நிறமேற்றப்பட்டவள்.

(4)
மூடாத விழிகளில்
வானம் நோக்குகிறது-
அநாதைப் பிணம்

இந்த ஆண்டு வெளியான கவிதைத்தொகுதிகளைப் பெரும்பாலும் வாசித்த எனக்குச் சில கோடுகள் கிடைத்திருக்கின்றன.  சுய அனுபவம், கற்பனை, அதிகார எதிர்ப்பு, கனவு என வியாபித்திருக்கும் இக்கவிதைக் கோடுகளில் வா.மணிகண்டன் கவிதைகளின் கோடும் ஒன்று. அதாவது ரத்தக்கோடு. மரணக்கோடு.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எதைப்பற்றிப் பேசுகின்றன? என்பதைத் தொகுதியின் பின்புறம் குறிப்பு எழுதி வாசித்தபோது எனக்குக் கிடைத்த வரிதான் ஒரு புத்தகத்தின் நான்கைந்து தாள்கள்.  அதாவது இங்கு தாள்கள் என்பது வெற்றுத் தாள் அல்ல.  ஒரு தாள் என்பது வன்மம், இரண்டாம் தாள் என்பது கொலை என்று அப்படி.... ரத்தத்தில் நனைத்த தாள்கள்.

இக்கவிதைகளை என்னால் ஓரே மூச்சில் வாசிக்க இயலவில்லை.  மிகவும் கவனமாகவும் சிரத்தையுடனும் வாசிக்கவேண்டிய பிரதியாக இருக்கிறது.  ஒரு கவிதையிலிருந்து இன்னொரு கவிதைக்குள் நுழைவதற்குள் என்னிடம் குருதி வழிந்துவிடுகிறது.  நீங்கள் இந்தத் தொகுப்பை வாசித்தீர்கள் எனில், மரணம், கொலை, வன்மம், தற்கொலை, துக்கம், பிரிவு, குருதி வழிதல் என்கிற பதங்களை, அதன் சாயல்கள் ஏதாவது ஒன்றினை, ஒவ்வொரு கவிதையிலும் கண்டுவிடமுடியும். 
ஒரு கருத்து சார்ந்த கவிதைகளை வலிந்து எழுதியதுபோலவும் தோற்றமளிக்கிறது.. 

நேற்று-இன்று-நாளைகளில் எழுதப்படும் எல்லாக் கவிதைகளிலும் மரணமும் குருதியும்  ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வாழ்கின்றன.  வலியும் பரிதவிப்பும் குற்றமும் பிரிவும் இதனுடன் பேசப்படுகின்றன. 

ஒரு தொகுதி முழுவதும் மரணத்தை மட்டும் வாசிக்கும்போது ஏதோ ஒரு சாவு வீட்டில் அமர்ந்துகொண்டு, எப்படி இறந்தான் இறந்தாள் என்று சாவு வீட்டாரிடம் கேட்க,  அவர்கள் சொல்வதுபோல் இருக்கின்றன கவிதைகள்.

நிகழ்ந்தது- நிகழ்கின்றது-நிகழலாம் என்கிற கோட்டில்  அமையும் கவிதைகள் இவை. மிகத் துல்லியத்துடன் கவனமாகவும் உத்திகளாலும் செதுக்கப்பட்ட கவிதைகள்தான் இவை.  சொல்முறைகள் மனுஷ்யபுத்திரனுடன் ஒத்துப்போகுபவை. ஒரு கவிஞனின் சாயல் நம்மீது விழுவது தவறில்லை. நாம் அந்தக் குடையிலிருந்து விலகி நடக்கத்துவங்கினால், நமக்கான குடை கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்

யாதார்த்தம் என்பதைக் கடந்து, இக்கவிதைகளைப் புனைவு என்கிற தளத்தில் நான் அணுகுகிறேன்.  நித்யம் அநித்யம், என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி, மூன்று தினங்களாக உங்களை அழைத்துக்கொண்டிருப்பவன், செவ்வந்திப்பூக்கள் சிதிறய மயானம், கரப்பான் பூச்சிகள் புழங்கும் வீடு, மழைக்காமம், புனிதக் காதல், கொலை மேடைக்குதிரைகள் ஆகியவை இத்தொகுதியின் கோட்டினை வரையும் மையமான கவிதைகள். இம்மையங்கள் யதார்த்துடன் கலந்த கற்பனைக்கோடுகள். குருதி வழியும் கோடுகள்.

இவர் கவிதைகளில் மரணமும் பிரிவும் வலியும் பிறக்க ஏதாவது ஒரு காரணம் இருந்துவிடுகிறது.  இந்தக் காரணத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளில் கவித்வ பின்புலமோ, ஆன்மீகமோ, தத்துவமோ நீங்கள் காணமுடியாது. வாழ்வின்  கொடூர கணங்களை, நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாத தீவினைகளின் சம்பவங்களை இக்கவிதைகள் மொழிகின்றன. இந்த அபூர்வம் எந்தப் பழைய மற்றும் புதிய கவிஞர்களிடம் என்னால் காண முடியவில்லை.

இந்தக் கவிதைகள் ஒவ்வொன்றினையும்  வாசிக்கும்போதும் நமக்குள் ஒருவித படபடப்பும் அச்சமும் பீதியும் அலைவதை உணர்ந்துவிடமுடியும். நாமே மரணத்தின் பிடியில் இருப்பதாகவும், நம் உடலில் குருதி வழிந்து பிணமாகிக் கொண்டிருப்பதாகவும் தோன்றும். அதிர்ச்சியூட்டும் மரணத்தின் படிமங்கள் நமது இரத்தத்தில் கலந்து ஒரு பயத்தை உருவாக்கி விடுகிறது.  அவர் கவிதையில் வரும் பிணவறையில் மண்டையைப் பிளக்கும் சப்தம் நம் காதை நிலைகுலையச் செய்வது என்பது உறுதி.

இக்கவிதைகள் அனைத்தும் ஒற்றைக்குரலாக மாறிவிடுவதையும், அவ்வொற்றைக் குரலின் வெவ்வேறு தொனிகளை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும்போது அச்சமும் பீதியும் ஏற்படுவது இயல்பாக நிகழ்ந்துவிடுகிறது. மரணத்தையும் பரிதவிப்பையும் திரும்ப திரும்ப வாசிக்கும்போது ஏற்படும்  அசௌகரியத்தை என்னவென்று சொல்வது?

இன்றைய நவீன கவிதையின் ஆன்மாவை இக் கவிதைகள் சொல்கின்றனவா? இக்கவிதைகள் புதிய கவிதை இயலை உருவாக்குகிறதா? என்ற கேள்விகளை எல்லாம் இங்கே பேசவேண்டியதில்லை. இத்தொகுதி நவீன வாழ்வில் நடக்கும் துர் சம்பவங்களால் புனையப்பட்ட ஓர் அனுபவம். இத்துர்சம்பவங்கள் நமக்குள் ஏற்படுத்தும் சிறு சலனங்களே இத்தொகுதியின் சின்னஞ்சிறு உரையாடல்.

இந்த உரையாடல்களை கவிதைக்கு வெளியேயும் உள்ளேயும் நீங்கள் நிகழ்த்திக் கொள்ளலாம்.  அதற்கான மிகச் சிறந்த பாதையை இத்தொகுதி அமைக்கிறது.  அந்தப் பாதை கொஞ்சம் நிணத்தால் ஆனது....ரத்தம் வழியும் உடலால் ஆனது.  நீங்கள் தாராளமாக யாத்திரை மேற்கொள்ளலாம்.  நீங்கள் நீதிதேவனாய் இருக்கவேண்டியது இல்லை. நமது உண்மையான மனதைத் திறக்கும்போது, நாம் எவ்வளவு பெரிய சாத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள இத்தொகுதி வழிவகுக்கும்.


இத்தொகுதியின் துர்சம்பவங்களிலிருந்து வெளியேறி இருக்கும் பறவைகள் நகர்ந்துவிட்ட வானம், காணாத மீசை, சாதுவான பொன்னிற மீன், சொல்லப்படாத ரகசியம், சுழுன்று விழும் இலை, டைனோசர்களுடன் வாழ்பவன், செவ்வாய்க் கிழமையின் மதுச்சாலை கவிதைகள் கொஞ்சம் நிறைவை உருவாக்குகின்றன.  வாழ்வு இக்கவிதைகளில் இருக்கிறது. அதாவது புனைவற்ற நிஜ அனுபவங்கள்.  இந்த அனுபவங்கள்தான் கவிதையை சத்தியத்திற்கு அழைத்துச் செல்பவை  என்று நம்புகிறேன்.

சிறிது முடிவாகச் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. இக்கவிதைகள் தினசரிகளில் வரும் கொடூர செய்திகளை கவிதை வடிவில் விரிவாக்கிச் சொல்வதுபோல் இருக்கிறது.

2.       நவீன கவிதை எடுத்து இயம்ப தயங்குகின்றன சாத்தான் உலகத்தை இக்கவிதைகள் முழுதளவும் குறிப்பாகக் காட்டுகின்றன.

3.   மரணத்தைப் பற்றிப் பேசும் ஒற்றைக் குரலாக மட்டும் இத்தொகுதி மாறிவிடுவது நமக்கு அசௌகரியத்தை உருவாக்கிவிடுகிறது. இந்த அசௌகரியத்திலிருந்து விடுபடும்போது, நமக்கு இக்கவிதைகள் அந்நியமாகிவிடுவதை நாம் பார்க்கலாம்.

4.   மரணம் குறித்த உரையாடலை எஸ்.சம்பத் தன் நாவலில் ஏற்படுத்தியது போன்ற சிறு சலனங்களை வா.மணிகண்டன் தம் கவிதையில் தவறவிடுகிறார். ஏனெனில் மரணம் இவர் கவிதைகளில் நிகழ்வாக மட்டும் சித்தரிக்கப்படுகிறது என்பதால்.

5.  இந்த வகைமாதிரி கவிதைகளை இதுவரை அவர் எழுதியிருக்கலாம். இனிமேல் தொடரும்போது சலிப்பான பிரதிகளாக அவை கருதப்படலாம். அனுபவத்தின் பின்புலத்திலிருந்து எழுதுவதற்கும், தகவலின் பின்புலத்திலிருந்து உருவாக்குவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

என்றாலும், வா. மணிகண்டன் இக்கவிதைத் தெரிந்தோ தெரியாமலோ மரணத்தின் கொடூர முகங்களையும், வாழ்வின் அபத்தங்களையும் எழுதியிருக்கிறார். இந்த அபத்தத்தை நம்மால் மறுக்க இயலாது ஒன்று. அதனாலேயே அதிகமாய் ஏற்று, குறைவாக மறுக்கவேண்டியுள்ளது. தயவு செய்து வா.மணிகண்டன் கொஞ்சம் மரணத்திலிருந்து, ஒற்றைக்குரலிலிருந்து விலகிவிடுங்களேன்.  நீங்கள் எங்கள் சாத்தான் உலகத்தைப் பார்க்க வைத்தது போதும். குரூரத்தை எவ்வளவுதான் தாங்கிக்கொள்வது?


(வா. மணிகண்டன்-என்னைக்கடவுளாக்கிய தவிட்டுக்குருவி – காலச்சுவடு- மு.ப.2012 – ரூ.70)