Wednesday, 9 October 2013

இலக்கியம் ஏன் வாசிக்கப்படவேண்டும்?

மிக எளிமையான இந்தக் கேள்வியிலிருந்தே நாம் இந்த விஷயத்தை ஆரம்பிக்கலாம். பால்ய காலத்திலிருந்தே நாம் வாசிக்கத் தொடங்கிவிடுகிறோம். அப்போது நம் கையில் தவழுவது சின்னஞ்சி சிறு குட்டிக் கதைகள் தாங்கிய ராணி காமிக்ஸோ, அம்புலிமாமாவோ, பாலமித்ராவோ. அது எதுவாகவும் இருக்கட்டும். ஒன்றை மட்டும நினைவுப்படுத்திப் பாருங்கள். அந்தப் பால்ய வயதில் நாம் அண்டங்களின் தோற்றம் பற்றியோ, உலகத்தின் வரலாற்றையோ படிப்பதில்லை. வாசித்தாலும் நம் மனதில் படிவதில்லை. நம் கைகள் தாங்கும் புத்தகத்தில் குதிரையின் குளம்படியோசையையும், மரங்கள்மேல் அமர்ந்த பறவைகளின் ஓசையையும், மலர்களின் சுகந்தத்தையும் நாம் உணர்கிறோம்... பார்க்கிறோம். வார்த்தைகளால் சொல்லமுடியாத கற்பனைகளில் நாம் சஞ்சரிக்கிறோம். இனம்புரியாத உணர்ச்சியில் நாம் சந்தோஷப்படுறோம். எது உங்களை சந்தோஷப்படுத்துகிறது? அந்த உணர்ச்சிதான் இலக்கியமாகக் கருதப்படுகிறது.
அறிவியல், வரலாறு, புவியியல், கணிதம் தராத ஓர் இன்பத்தை இலக்கியம் தருகிறது. மனித குலத்தின் தோற்றத்தைப் பற்றி ஒருவர் வாசிப்பதற்கும், அவரே ஒரு அருவியின் ஓழுங்கைப் பற்றிய விவரணையை வாசிப்பதற்கும் பெருத்த வேறுபாடு உணர்கிறார். மன நெகிழ்வைத்தான் இலக்கியம் உண்டாக்குகிறது.
ஆதிமனிதன் குரங்கிலிருந்து பிறந்தான். குரங்கின் பரிணாமமே மனிதன். குரங்குகளில் இப்போது பல வகைத்தோற்றம் உண்டு. இந்தியக் குரங்குகளுக்கும் ஆப்பிரிக்க குரங்குகளுக்கும் தோற்றத்தில் பல வேறுபாடு உண்டு. கருங்குரங்கு, செம்முகக்குரங்கு, சிங்கவால் குரங்கு என்று பல. குரங்கின் பல குணங்கள் மனிதர்களுடன் ஒத்துப் போகின்றன. அவை கூட்டங்கூட்டமாக வாழும்.
கோடைக் காலம். வெப்பத்தைத் தாங்கமுடியவில்லை. பட்டுப்போன மரத்தின் மேல் அமர்ந்த பெண் குரங்கு தாகத்தில் தள்ளாடுகிறது. ஆண்குரங்கு அதைப்பார்த்து ஏக்கம் கொள்கிறது. உடனே, வானத்தின்மேல் தாவுகிறது. அங்கே மிதந்தபடி சென்றுகொண்டிருக்கும் ஒரு மேகத்தைப் பிழிகிறது. சொட்டுச் சொட்டாக விழும் மழைத்துளியைப் பெண்குரங்குப் பருகித் திளைக்கிறது. ஆண்குரங்கைக் கட்டி அணைக்கிறது.
இந்த இரண்டு விவரிப்புகளில் முதலாவது அறிவு சார்ந்தது. இரண்டாவது கற்பனைக் காட்சி. அறிவு சார்ந்த விஷயம் நமக்குள் எதையும் சலனப்படுத்தவில்லை. அது ஒன்றைப் பற்றிய தகவலாக மனதில் பதிந்துவிடுகிறது. ஆனால் இரண்டாவது பத்தி நமக்குள் ஓர் இன்பத்தை உருவாக்கிவிடுகிறது. இரண்டாவது விஷயம் நடக்கப்போவதில்லை. ஆனால் நடந்தால் நன்றாக இருக்கும் என்றோ, இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்றோ எழுதப்பட்டிருக்கலாம். இந்தக் கற்பனையில் இரண்டு விஷயங்கள் தெரிகின்றன. கோடைக்காலத்தில் நீர் இருப்பதில்லை. யாவும் வறண்டுவிடுகின்றன. விலங்குகளை அது பாதிக்கிறது. படைப்பாளி இரண்டையும் இணைத்துக் கற்பனையாக எழுதுகிறான். கற்பனை வழியாக ஒரு மீட்சி உண்டாகிறது. குரங்கின் தாகம் அடங்குகிறது. தூய அன்பின் அடையாளமே, ஆண்குரங்கின் செயல். இதைத்தான் மனித குலத்திற்கு நேரடியாகவோ, கற்பனையாகவோ இலக்கியம் சொல்கிறது. ராமாயணக் கதையிலும், பாரதக் கதையிலும் பாருங்கள். மனித குணங்கள் எப்படி எப்படி வேறுபட்டுச் சிதறிக் கிடக்கின்றன. எவ்வளவு குற்றம் செய்கின்றன? எத்தனை மனிதர்கள் உதவுகின்றனர்? இதைத் தான் பேரிலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் சித்தரிக்கின்றன.
வீசும் காற்றுதான் சிவன் என்றும், கற்பூரத்தின் நறுமணம்தான் பெருமாளின் வாய்நாற்றம் என்று கூறுவதுதான் இலக்கியம். களவு, காமத்தையும் ஒழித்துவிடு என்பதுதான் இலக்கியம். ஒரு மனிதனின், ஒட்டுமொத்த சமூகத்தின் அகத்தை உணர்வைப் பிரதிபலிப்பதுதான் இலக்கியம். கதையாகவும் கவிதையாகவும் நாவலாகவும் அது வெவ்வேறு வடிவத்தில் இதைத்தான் போதிக்கிறது. மனித குல ஆன்மாவைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாக உள்ளதுதான் இலக்கியம்.
ஆதிகாவியமாகக் கருதப்படும் கில்காமேஷ் என்பதிலிருந்து தற்போது படைக்கப்படும் இலக்கியம் வரை எதுவானாலும், போதிக்கப்படுவது ஒன்றே ஒன்று. அது மாறாத அன்பு.
அழகியலையும் தத்துவத்தையும் பின்னிப் பிணைந்து ரசனையுடன் அமைவைதான் இலக்கியம். கற்பனையின் ஊடே நாம் இப்பிரபஞ்சத்தின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள இலக்கியம் பயன்படுகிறது. செம்பருத்தியின் வடிவத்தைப் பற்றிய ஆராய்ச்சிதரும் இன்பத்தைவிட, அதன் நிறம், அழகு, நறுமணம் பற்றிய எழுத்து, நமக்குள் விளைவிக்கும் ஒருவித இன்பமே இலக்கியமாகிறது. தொடு உணர்ச்சிபோன்றேதான் மன உணர்ச்சி. இந்த மன உணர்ச்சிதான் இலக்கியம்.
சரி. மீண்டும கேள்விக்கு வருவோம்? ஏன் இலக்கியம் வாசிக்கப்படவேண்டும்? ஒரு வரலாறு, புவியியல் நூல் தராத, கணித சூத்திரங்கள் தராத, அறிவியல் சிந்தனைகள் தராத ஓர் உணர்வை இலக்கியம் தருகிறது என்பதால் இலக்கியம் வாசிக்கப்படவேண்டும்.
ஒரு பறவையின் சிறகடிப்பையோ, கூழாங்கல்லின் மௌனத்தையோ, ஒரு புள்ளிமானின் தாவலையோ, ஒரு மழைத்துளியின் அழகையோ, கடலின் பெருங்கோபத்தையோ இலக்கியம் அல்லாத நூல்களால் சொல்லமுடிவதில்லை. அதை இலக்கியம்தான் நமக்குள் சித்திரமாக வரைந்துவிடுகிறது.
வாழ்வின் ரசனை மிக்க விஷயங்களை, அன்பை, எதிர்பார்ப்பை, மனிதகுலம் தவறிய பாதைகளை, வாழவேண்டிய திசைகளை இலக்கியம் கைபிடித்து அழைத்துச் சென்று காட்டுகிறது. அனுபவத்தின் கிழவனாகி, சின்னஞ்சிறு பேரனாகிய நம்மை அன்புடன் ஆராதித்து அழைத்துச் செல்கிறது. எதை நாம் இழந்துவிட்டோமோ, எதை நாம் இழந்துகொண்டிருக்கிறோமோ அதை மௌனமாகச் சொல்கிறது. எதை நாம் கைக்கொள்ளவேண்டுமோ அதையும் சொல்கிறது. கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை என்ற பல்வேறு நிழல்களில் நடமாடும் அனுபவம்தான் இலக்கியம். மனிதகுல உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் பச்சை ரத்தம் அது.
ரஷ்யாவின் பனியை நேரில் பார்த்திருக்கமாட்டோம் நாம். இந்தியாவை ஒத்த நிலச்சூழலையுடைய லத்தீன் அமெரிக்காவைத் தரிசித்திருக்கமாட்டோம் நாம். அண்டைவீட்டானிடம் நாம் அண்டிப் பேசுவதில்லை நாம். ஒரு நாட்டின் இயற்கையை, மனித குணங்களை, வாழும் முறைகளை, அவர்களின் பண்பாட்டு வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை, மூடநம்பிக்கைகளை நாம் உணர உதவும் ஒரே வழிதான் இலக்கியம். ரஷ்யக் கதைகள் பனியில் வெம்மையையும், லத்தீன் அமெரிக்க கதைகள் வெப்பத்தில் குளுமையையும் காணச் செய்கினற்ன. எனவேதான் நாம் இலக்கியம் வாசிக்கவேண்டும்.
எப்படி வாழ்ந்தோம்? எப்படி வாழ்கிறோம்? எப்படி வாழவேண்டும்? என்று சொல்வதுதான் இலக்கியம். பேராசைகளால் அழிந்துகொண்டிருக்கும் மனித குலத்திற்கு அழகியலையும் ஆன்மிகத்தையும் ரசனையையும் கற்றுத்தருவதுதான் இலக்கியம். எந்த வரலாற்று நூலும் இலக்கியத்தைத் தருவதில்லை. ஆனால் இலக்கியம்தான் வரலாற்றை விமர்சிக்கிறது. பண்பாட்டு விழுமியங்களை தனக்குள் விவரிக்கிறது.
இலக்கியம் என்பது வேறு எதுவுமில்லை. அது மனிதகுலத்தின் மனசாட்சி. பிரபஞ்சத்தில் தூய்மையை விரும்பும் ஆன்மா. நம் மனதின் மேல் விழும் ஓர் அருவி.

September 30, 2013 on tamil.thehindhu.com

1 comment:

  1. அறிந்து கொள்ள வேண்டியது அவரவர் விருப்பம்... முடிவில் நன்றாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete