Saturday, 17 May 2014

கல்குதிரையில் வெளியான கவிதைகள்

கரா-தே

என் கரங்களில் ஒன்று
மில்லை. கருத்த மேகங்களை நோக்கி
கைகளை வெறுமனே வீசுகிறேன். 
மரங்களை நோக்கிக் கைகளால் வெட்டுகிறேன்.
நிலத்தையும் விடவில்லை என்
கைகள். அங்கிருந்து வந்து சேர்கின்றன
சில பல மழைத்துளிகள்
பல சில வெள்ளை மலர்கள்
சின்னஞ்சிறு நீருற்று பீறிடுகிறது.
என் கரங்கள்
முன்னைவிட
மிக மென்மையாக இருக்கின்றன.

இறப்பின் பாடல்கள்

தாத்தாவுக்கு நாலுவேலி நிலம்
இருந்தது. அவருக்கு வாழ்க்கையில்
ஏதும் நஷ்டமும இல்லை. இருந்தாலும்
ஊருக்குத் தொலைவில் குதித்தார். அப்போது
அது மாபெரும் ஏரியாக இருந்தது. அவர்
உடலைக் கருவேலமரங்கள் தாங்கி இருந்தன.
அப்பாவுக்கு எட்டுவேலி நிலம் பரவி இருந்தது.
அவருக்கும் கஷ்டம் ஒன்றுமிலை. ஆனால்
அவர் கிராமத்திற்கு வெகுதொலைவில்
குதித்தார். அது குளமாய் இருந்தது. சிவப்பு அல்லிகள்
தான் அவர் உடலைக் காட்டிக்கொடுத்தன. எனக்
கொன்றும் குறையுமில்லை. நான் பதினாறு
வேலிக்குச் சொந்தக்காரன். கூடியமட்டில் இன்
னொன்றையும் சேர்க்கலாம் தப்பில்லை.
நான் குட்டையில்தான்
குதித்தேன். என் சாவை ஊசித்தும்பிகள்
ஊர்முழுக்கச் சொல்லித் திரிந்தன.
அப்புறம் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம்
ஒருவனுக்காக. அவனும்கூட நேற்றுதான் குதித்தான்.
ஒரு சின்னஞ்சிறு கண்ணாடிக் குடுவைக்குள்.
ஒன்றும் பிரச்னை இல்லை. அவன் மகன் கண்ணாடிக்
குடுவைக்குள் அலையும் மீன்களைப் பார்க்கிறான்.
ஒரு மிகப் பெரிய மீன் பின்னால் பெரியமீன் பின்னால் ஒரு சிறிய மீன்
அவன் முகச்சாடையில்.

வாதுமை இலையின் சிகப்பு

அந்தப் பாதாம் இலையின் சின்னஞ்
சிறு சிகப்பு நிறத்தின்மீது
தான்
என் வீட்டை
அமைத்துக்கொள்ளத் துடித்தேன். ஆனால்
முடியாததால் நான் பாதாம் மரமாகினேன்.
பாதாம் இலைகளே, பாதாம்
இலைகளே, என் வீட்டிற்கு வந்து சேருங்கள்,
பாதாம் இலைகளே.


தே

உன்னைச் சுற்றி ஒரு காட்டை
வரைந்துகொள். முடிந்தமட்டில் ஆற்றின் சலசலப்பு
கொஞசமாவது கேட்கும்படி காதை
வைத்துக்கொள். சிறிய புலியின் உறுமல் போதுமானதாக இல்லை. எனவே ஒரு மயிலின் அகவல் சங்கீதமாகிறது. எனவே அதை அருகில் வைத்துக்கொள். பின்பு ஒரு,
பல மூங்கில்களை வெறுமனே கண்களால் வெட்டி
வீடு அமைத்துக்கொள். போதும். காற்றும் வெளிச்சமும் நுழைய சுவர்களை உடைத்தெறி. உன் அந்திப்பொழுதில்
கைகளை குவித்துக்கொள் தேனீர்க்கோப்பையாக. வெறுமனே
இருக்கிறது. உன் உதட்டருகே கொண்டுபோ. ஆம். அப்
படியே உறிஞ்சத் தொடங்கு.

நான் சுவைக்கிறேன் தே.
அங்கே  கோப்பை இல்லை. கைகளும் இல்லை.
வெறுமனே நாக்கால், கண்களால், வெறுமையால்.
தே
சுவையாய், புலியின் உறுமலாய், அகவலாய், நீரின் சலசலப்பாய், மூங்கிலின் அசைவாய்.
வீட்டிலிருந்து வெளியேற்றுகிறது சின்னஞ்சிறு
நீர்த்
துளி. துளி. துளி. துளிகளாக என்
னை.
கிளி உத்சவம்

தாத்தா செத்தப் பிறகு அவர் வீட்டுக்குப் போனோம்.
அங்கே அவரைத் தவிர எல்லாரும் இருந்தனர்.
வீட்டிற்கு எதிரே இருந்த பெரிய ஆலமரப்
பொந்துகள் இப்போது எங்கோ போய்விட்டனவாம். இது பழைய கதைதான் என்றாலும். கிளிகள் என்ன செய்கின்றன.
அந்திமாலையில், தலை கிழக்கிலும் கால் மேற்கிலுமாகத்
தாத்தா போய்க்கொண்டிருந்தார். பின்னால் நானும் போகப் போகிறேன் என்பதால் நான் போகவில்லை.  ஆனால்
தாத்தாவின் சவத்தின் மேல் ஓ
ரிரு கிளிகள் பறந்த, பறந்தவண்ணம் போய்விட்டன.
தலை மூழ்கி, இரவு உறக்கம் வராமல்
உச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கிளிகள்
அவருக்கு முன்னாலே போய்தான்விட்டன. என்றாலும் வீட்டின்மேல்
கிளிகள்
பேசத் தொடங்கிவிட்டன, பல குரல்களின்
ஒரே சொல்
லில்.

(தாத்தா கூரெள்ள ஜெயராம சிருஷ்டருக்கு)


நன்றி - கல்குதிரை - வேனில்கால இதழ்கள் - 2014

யுகாதி- 31.03.2014

Monday, 13 January 2014

மாங்குடி சிதம்பர பாகவதர் என்னும் வித்வானைத் தேடி ஒரு யாத்திரை“காவேரி மட்டும்தானா குடமுருட்டி கிடையாதா? காவேரிக்கு ஒரு இம்மி சோடையில்லே சார் குடமுருட்டி அதே விளைச்சல், அதே மாதிரி கோவில்கள், அதே மாதிரி மகான்கள், அதே மாதிரி வியாபாரம். குடமுருட்டியை விட்டுவிடாதீர்கள். இந்த ஊருக்குப் பக்கத்திலேயே வையச்சேரியிலே மகாவைத்யநாதய்யர் இருந்தார். மாங்குடியிலே சிதம்பர பாகவதர் – இந்த ஊரிலேயே வேணுகோபால்னு ஒரு பெரிய நாதஸ்வரக்காரர் இருந்தார். ஸர் ஸி.வி.ராமன் ஊர் பக்கத்திலே புரசக்குடி. இங்கே பக்கத்திலே சக்கராப்பள்ளி – சப்தஸ்தானம் உண்டு – இந்த ஊரிலேயே வெங்கடசூரின்னு ஒரு சௌராஷ்டிரகவி இருந்தார்.“
மேற்கண்ட வரிகள் தி.ஜானகிராமன் அவர்களின் நடந்தாய் வாழி காவேரி பயணப்புத்தகத்தில் வருகிறது. இந்த வரிகளில் வரும் பெயர்கள்தான் ஒவ்வொருவிதமான சாவிகள்.
நான் அய்யம்பேட்டைக்கு வந்து ஆறு வருடங்கள் மேலாகின்றன. இந்த ஊரைப் பற்றி எனக்குத் தெரிந்த அளவிற்கு, இந்த ஊரின் முக்கியமாக் குடமுருட்டி ஆற்றின் நாகரிகம் எனக்குப் பிடிபட பல மாதங்களாயிற்று. ஒவ்வொரு நாளும் ஒருவித உற்சாகத்தைக் கொண்டாடும் கிராமம் இது. (பேரூராட்சியைக் கிராமம் என்று சொல்லிக்கொள்ளலாம் அல்லவா) என் வீட்டில் இருந்து ஐந்து நிமிடத்திற்குள் குடமுருட்டி ஆற்றில் பாதத்தை நனைத்துவிடலாம் நாம். எப்போதும் கிருஷ்ணன் கோவில் கீழ வீதியில், பதரா ஆலயத்திலும், வெங்கடரமண பாகவதரின் மஹாலிலும் இசையின் ஓசை பரவிக்கொண்டிருக்கும். முன்னது வெங்கடசூரியின் கவிதைகள் எனில், பின்னது கீர்த்தனைகள். மேல வீதி வந்தால், மறைந்த நாதஸ்வர வித்வான் வேணுகோபால்பிள்ளை வாழ்ந்த வீடு, வாசிக்கமுடியாத நாதஸ்வரம்போல் நின்றுகொண்டிருக்கிறது. நான்கு வீதியிலும் இப்போது மார்கழி உத்சவம் பரிபாலிக்கிறது.
தி.ஜாவின் மேல் அபார விருப்பம் வந்த காரணம், அய்யம்பேட்டைக்கு நான் வந்த பிறகுதான். இந்த ஊரில்தான் தி.ஜா வரலாற்று ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார் என்பது கூடுதல் சந்தோஷம். இந்தப் புத்தகத்தின்மீது அதிக கவனமான வாசிப்பு நிகழ்ந்தது எனக்கு. நடந்தாய் வாழி காவேரியைப் பல வருடங்களுக்கு முன் வாசித்திருந்தாலும், இப்போது வாசிக்கும்போது மிக ஆத்மார்த்தமாகவே இருக்கிறது. அதில் வரும் ஊர்களில் நான் காலார நடந்திருக்கிறேன். அவற்றின் ஒவ்வொரு தெருவின் காற்றையும் சுவாசித்து இருக்கிறேன். அந்தக் கிராமங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கிறது என்பது புரிபடவில்லை. தி.ஜாவின் புத்தகம் எனக்கு முதல் சாவியாக அமைந்துவிட்டது. தி.ஜா குறிப்பிடும் அந்த மாபெரும் வித்வான்களின் பெயர்களை நான் இணையத்தில் தேடிப் பார்த்தேன். வித்வான்கள் மறைந்ததுபோலவே, சரித்ரமும் மறைந்துவிட்டிருக்கிறது. கொஞ்சம் சீரணிக்க சிரமமாயிருந்தது. நாம் செய்தால் என்ன? என்ற ஒரு சாவியைத் தி.ஜா இந்தப் புத்தகத்தில் காட்டிவிட்டார்.
மாங்குடி சிதம்பர பாகவதர் குறித்து எந்த விஷயமும் கிடைத்தபாடில்லை. ஓரேவழி மாங்குடி என்னும் அகரமாங்குடியை நோக்கிச் செல்வதுதான். மார்கழி தொடக்கதிற்கு சில நாள் முன், அந்த ஊருக்குச் சென்றேன். வழியில் அந்த ஊரைச் சேர்ந்த வண்ணார் கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பார்த்துப் பேசினேன். அவரைக் குறிப்பிட்டும் கேட்டேன். அவருக்குத் தெரிந்த விஷயம் என்றாலும், அவ்வளவு நேர்த்தியாக இல்லை. தன்னிடம் ஒரு புத்தகத்தை, ஊரைக் காலிசெய்துவிட்டுப் பிரதேசம் போன பிராமணர்கள் கொடுத்திருக்கிறாரகள் என்றார் அவர். அந்தப் புத்தகத்தில் அந்த விஷயங்கள் இருக்கக்கூடும் என்று நம்பிக்கை தந்தார். கால் ஏற, ஒரு படி கிடைத்துவிட்டதுபோல் உணர்ந்தேன் நான். புத்தகமும் கிடைத்துவிட்டது.
அய்யம்பேட்டையின் தென்கிழக்கில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில்தான் அகரமாங்குடி என்பதில் தூரம் என்பது அளவு மட்டுமே. காலத்தின் அளவு சுமார் நூறுவருடஙகள்மேல். என் வீட்டிலிருந்து புறப்படும்போது, வழியில் வேங்கடசூரியின் சௌராஷ்டவரிகள் காற்றில் மிதந்து வருகின்றன. இன்னும் சில தப்படிகள் கடந்தபின், தியாகைய்யரின் முதல்சீடரான வேங்கட பாகவதரின் இசை மழை நின்றபாடில்லை. அதையும் கடந்து சென்றபின், மதகடி என்னும் இடத்தைக் கடந்து போகும்போது, சக்கரவாகப் பறவையின் இனிய ஓசையில் வளர்ந்திருக்கும் சக்கரவாகீஸ்வரர் கோவில் கம்பீரமாக நிற்கிறது. எவ்வளவு அற்புதமான கோபுரம் கொண்டது அது. பிரம்மமமுகூர்த்தவேளையில் சப்தஸ்தான தொடக்கவிழாவில், எவ்வளவு நபர்கள், பல்லாக்கு வெளியேறி வர அமையும் கோபுர தரிசனத்தில், தம் கரங்களைத் தலைக்குமேல் அம்பாரமாகத் தூக்கி வணங்குகிறார்கள். அவையே சின்னஞ்சிறுகோபுரங்கள் போல், இமையமலைக்கு அருகில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு மலைகள்போல் காட்சியளிக்கும்.
மாங்குடி சிதம்பர பாகவகரின் இல்லம் இன்று
மாங்குடி சிதம்பர பாகவகரின் இல்லம் இன்று
இவற்றையெல்லாம் கடந்தபின், மண் சாலை தொடங்கிவிடுகிறது. அகரமாங்குடி என்னும் சிற்றூர் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிகிறது. வழியே தொடரும் வாய்க்கால் ஒரு சிற்றாரைப்போல் தொடர்கிறது. அது சிலநேரம் வருகிறது…விலகுகிறது…தொடர்கிறது. பச்சைப்பசேல் என்று கண்ணுக்கெட்டியதூரம்வரை பரந்துவிரிநத வயல்கள். காற்றுடன் அசைந்து விளையாடும் வயல்கள். வயல்களில் அங்கங்கே மௌனமாக நின்றுகொண்டிருக்கும் மூங்கில்தோப்புகள். தன்னைத் தானே வளர்த்துக்கொள்ளும் மூங்கில்கள். கொக்குகள் வரிசையாகவும் வரிசை கலந்தும் அமர்ந்து, எக்கிப் பறந்துகொண்டிருந்து, பின் அமரும் காட்சிகள் கண்ணிற்குள் நிகழாமல் இல்லை. பாம்பைப்போல் நெளிந்தோடும் சாலை. சாலைக்குள் பறந்தேகும் கொண்டலாத்திகள். மைனாக்கள். இனிய ஓசை பரவும் பாதையில் ஒன்றுடன் ஒன்று வெட்டிச் செல்லும் பறவைகளின் நாதம். இவற்றையும் கடந்துபோகும்போது வரவேற்கிறது, ஒரு மென்மையான மண்பாதை. பாதையின் தொடக்கத்தில், ஊரின் நுழைவாயிலில் கிடந்து வரவேற்கிறது, வரதராஜபெருமாள் குளம். பல நூற்றாண்டுகளாகக் கிடந்த கோலம். புற்கள் மண்டிய படிக்கட்டுகள் என்னை அதனிடத்து அழைத்துச் செல்கின்றன. கல்படிக்கட்டுகள் பெரும் வழவழப்பு மிக்கதாக இருக்கின்றன. கற்களைக் காலம் தீட்டியதாய் இருக்கலாம். அங்கங்கே மலர்ந்தபடியிருக்கும் செவ்வல்லி மலர்களும், வெள்ளை அல்லி மலர்களும் பெருமாளின் நாமத்தைப் பறைசாற்றுகின்றன. ஊருக்குள் நுழையும்போது வீடோ, தெருவோ தெரிவதில்லை. மாறாக அமைவது வரதராஜபெருமாள்கோவில்தான். சிதம்பர பாகவதர் வணங்கிய அந்தக் கோவிலை நானும் நின்று, பல்லாண்டு பாடி வணங்கி ஊருக்குள் செல்கிறேன்.
ஒரு மரத்திலிருந்து பிரியும் கிளைகளைப்போல் பிரிகின்றன தெருக்குள். அவற்றிற்குள் நேர் ஓழுங்கு இல்லை. கிளைகளாகவே பிரிகின்றன. கிழக்கென்றோ, வடக்கென்றோ, தெற்கென்றோ பேதம் இல்லாமல் வளைந்து நெளிந்து செல்லும் தெருக்குள். உயர்ந்து தாழ்ந்து செல்லும் மண் தெருக்கள் அவை. நீண்ட அக்ரஹாரத் தெருக்கள். விஸ்தாரமான கட்டிடங்கள். வேத விற்பன்னர்கள் வாழ்நத ஊர் இது. அதற்கு அடையாளமாகப் பாழடைந்த இரண்டு வேதப்பாடசாலைகள் இன்னும் கம்பீரமாக நிற்கின்றன. காலத்தால் அழிக்கமுடியாமல் நிற்கும் சொச்சங்கள் அவை. காலத்திற்கேற்ப மாறாமல் நிற்கும் மாடி வீடுகள். காலத்திற்குத் தன்னைப் பலிகொடுத்து அழிந்த வீடுகள். அபூர்வ மனிதர்கள் சஞ்சரித்த பூமி இது. நாழி ஓடுகளும், அக்ரஹாரத்திற்கே உரிய பரந்த திண்ணைகளும் நிறைந்த சிதம்பர பாகவதர் வாழ்ந்த தெருவுக்குள் நுழைகிறேன். என் பாதத்தில் காலணி இல்லை. மகான்களின் பாதையில் காலணி அணிவதைத் தவறாகவே உணர்கிறேன். பூவேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளும், சன்னல்களும்கொண்ட வீடுகளின் நடுவில் நிற்கிறது சிதம்பர பாகவர் வீடு. கம்பீரமாக நிற்கும் வீட்டின் நிழல் என்மேல் சாய்ந்திருந்தது. அந்நிழலைத் தேகமெல்லாம் சுமந்தபடி, வீட்டின் முற்றத்துப் படிக்கட்டில் கால் பதிக்கிறேன்.
சிதம்பர பாகவதர் ஒரு கதாகலாட்சேபர். கட்டுரையாளர். இசை வல்லுநர். ஹரிகதை வல்லுநர். வழக்கறிஞர். தஞ்சாவூர் துளஜாஜி அவையில் சாம்ராட் என்று வாழ்ந்தவர். மகாகத கண்டீரவ பட்டம் பெற்றவர். கணவித்யா துறையில் மிகச் சிறந்து விளங்கிய கணம் திருமலை ஐயர் வம்சத்தைச் சேர்ந்தவர். கோவிந்தசாமிபிள்ளை நாடகங்களையும், மஹா வைத்தியநாத ஐயர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் இசைக்கச்சேரிகளைக் கேட்டு கலாரசனையை வளர்த்துக்கொண்டவர். வழக்கறிஞராகும்பொருட்டுத் தேர்வுக்குத் தயாரானவரைக் கதாகலாடசேபக்காரராக மாற்றிய பங்கு இருவரைச் சேரும். ஒருவர் புலவர் பிரதாபராமசாமி பாகவர். மற்றவர் சப்தரிஷீஸ்வர சாஸ்திரிகள். இருவரும் மாங்குடிக்காரர்கள். அவர் பாகவதர் ஆவதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.
காவிரிக் கரையில் தமது நண்பர்களுக்கு இசை நயத்துடன் பாடிக்காட்டிய சிதம்பர பாகவதர், வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் தன் சகோதரர்களுக்குக் கதா சொல்லி இருக்கிறார். அவர்களுக்குத் தாமாகவே மிருதங்கப் பயிற்சியும் அளித்திருக்கிறார். அவர்களுடன் கலாட்சேபம் செய்திருக்கிறார். அப்போதே பாகவதர் என்று அழைக்கப்பட்டிருக்கிறார் அவர். அதற்கு முன்பு, அந்த இரண்டு மனிதர்களிடமும் சமஸ்கிருதத்தையும் இசையையும் பயின்றிருக்கிறார். பின்னாளில் தியாகராஜ கீர்த்தனைகளைத் தில்லைஸ்தானம் பஞ்சு பாகவதரிடமும், பகவத் கீதையின் சாரம்சத்தைத் திருவையாறு பண்டிதர் லெக்‌ஷ்மணாசார்யாவிடமும் தேறிக்கொண்டார்.
அவருடைய கலாட்சேபம் மிகத் துல்லியமாக இருக்குமாம். குறித்த நேரத்தில் மேடை ஏறிவிட்டால், குறைந்தது ஆறுமணிநேரம் ஆகுமாம் மேடையிறங்குவதற்கு. சாகசத்தை விரும்புகிறவர் அவர். நவரசம் மிக்கவை அவருடைய கதைசொல்முறை. பிரதிபலிக்கும் அர்த்தபாவங்களுடன், அன்றைய அரசியலை நகைச்சுவையாக்கித் தருபவர். 1926 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் சென்னை பகவத் கதா பிரசங்க சபாவில், சர் சி.பி. ராமசாமி ஐயர், சிரம்பர பாகவதரைப் பாராட்டி மகாகத கண்டீவர பட்டமளித்திருக்கிறார். அவருடைய சாகசங்களை முன்வைத்து, அபிநவ பரதாசார்யா என்ற பட்டத்தை, ராமநாதபுரம் மன்னர் 1929 இல் வழங்கிப் பெருமை அளித்துள்ளார். 1932 இல் சென்னை கோகலே அரங்கில் சிதம்பர பாகவதர் ராமாயணக் கதையை நிகழ்த்தியிருக்கிறார். தியாகராஜரின் கீர்த்தனைகளில் 300 கீர்த்தனைகளைப் பாடின கலாட்சேபம் அது. அடுத்த வருடம் அவருக்காகக் காத்திருந்த பட்டம்தான் சங்கீத கலாநிதி. 1937இல் சென்னை மியுசிக் அகாடெமி அளித்த பட்டம் இது. இவை அவருடைய பெருமையான விஷயங்கள்தான் என்றாலும், அவர் ஓர் எழுத்தாளராகவும் விளங்கினார். காலட்சேபம் என்ற வியாஸம் என்ற நூலை எழுதி, அகில இந்திய இசை மாநாட்டிற்கு அனுப்பி வைத்தார். காலம் கி.பி.1927. சிவபக்தி மிகுந்த இவர், காசி, மும்பையிலும் ஹரிகதை சொல்லியிருக்கிறார். தாம் செல்லுமிடத்தில் ஒரு சிவஸ்தலத்தைக் கண்டுவிட்டால் தேவாரம் பாடி விடுபவர். அக்கோயில்கள்மீது தானாகவே பதிகங்களைப் புனைந்து பாடுபவர் அவர். தான் பிறந்த அகரமாங்குடியில் வருடந்தோறும் தன் வாழ்நாள்வரை, ஆருத்ரா உத்ஸவம் நடத்தியவர். தஞ்சை கிருஷ்ணபாகவதரின் கலாட்சேபத்தைக் கேட்டு ரசித்து, தன்னைக் கலாட்சேபக்காரராக மாற்றிக்கொண்ட சிதம்பர பாகவதர், 1880 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம்நாள் தோன்றி, 1938 இல் சிவபதம் அடைந்துவிட்டார்.
அந்த வீட்டில காலடிபடும்போதும், தூண்களைத் தீண்டும்போதும் இனம்புரியாத உணர்வு தோன்றிவிட்டது. கனத்த மௌமும் இருளும் சூழ்ந்த அந்த வீட்டில் இப்போது யாரும் இல்லை. ஒரு மெல்லிய நிசப்தம் ஏதோ ஒரு கதையைச் சொல்வதுபோலவே இருந்தது. வீட்டின் முன் இரண்டு ஆட்டுக்குட்டிகள் அமர்ந்திருந்தன. அன்று அவருடைய பிறந்த நாள். இதை நான் சற்றும் எதிர்பாராத ஒன்று. கொஞ்சம் ஆசீர்வதிக்கப்பட்டவன்போல் ஆனேன். இது முதல் முகூர்த்தம்.
ஆருத்ரா உத்வசத்தன்று திரும்பவும் அகரமாங்குடிக்குள் நுழைந்து வெளியேறினேன். அன்று மாலை இந்தக் கட்டுரையை எழுதுவதற்குமுன் சிதம்பர பாகதவர் வீட்டைப் பார்க்க போனேன். வீட்டின் படிக்கட்டுகளில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் அமர்ந்திருந்தன. வெள்ளாடுகள். அவற்றைக் கடந்து, சன்னலுக்குள் வீட்டினுள் எட்டிப் பார்க்கிறேன். கருப்பு எள் இருட்டு. அந்த வீடு திரும்பவும் ஏதோ சொல்கிறது. சிதம்பர பாகவதரின் ஆருத்ர தரிசனம் இன்று இல்லை என்று அழுகிறது. இந்தக் கட்டுரையை எழுதி முடித்தபோது இன்று ஆருத்ரா தரிசனம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆருத்ராவை விரும்பியவரைப் பற்றி, எழுதிய இன்று ஆருத்ரா என்பது இரண்டாவது முகூர்த்தம்.
தி.ஜா என்னிடம் சில சாவிகளைத் தந்துவிட்டுப் போயிருக்கிறார். அந்தச் சாவிகளைக் கொண்டு கடந்த காலங்களைத் திறக்கவேண்டும். அதனூடே மறையாமல் வாழும் கிராமங்களைப் பார்க்கவேண்டும். இசையின்புழுதிபடிந்த கட்டிடங்களை, வித்வான்களின் சரிதத்ததைக் கேட்டு எழுதவேண்டும். அகரமாங்குடியிலிருந்து மேற்கே சூரியன் மறைந்துகொண்டிருக்கிறான். அந்தச் செவ்வொளி தென்னை மரங்கள்மீது சாய்ந்தாடுகிறது. அங்கே இருக்கும் வையச்சேரியில் மென்மையான சொல் கேட்கிறது. ஆம். வையச்சேரி வைத்தியநாத பாகவதர் என்னும் மஹாவைத்தியர் அழைக்கிறார் என்னை. அங்கே நான் போகத்தான்வேண்டும்.

நன்றி
தி.ஜாவிற்கு.
அகரமாங்குடி ஆன்றோர்களும் சான்றோர்களும்
என்ற நூலை வெளியிட்ட
வ.சேதுராமன் ஐயர் அவர்களுக்கும்.
ராணி திலக்